

இந்திப் படவுலகில் 1970-80 ஆண்டுகளில் இசை சாம்ராஜ்ஜியம் நடத்திய ஆர்.டி.பர்மன் என்னும் ராகுல்தேவ் பர்மன் சுமார் 330 படங்களுக்கு இசையமைத்தவர். இந்திய திரையிசையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் என்றால் மிகையல்ல.
தனது காலத்தால் அழிக்க முடியாத திரை இசை மெட்டுகளால் கோடானுக்கோடி இந்தியர்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளார். இந்தியா முழுவதுமே இவரது இசையில் கட்டுண்டு கிடந்த காலம் அது. தமிழ் நாடெங்கும் எழுபதுகளில் இவரது இந்திப் பாடல்கள்தான் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தன. இந்தி தவிர, வங்காளம், தமிழ் படங்களுக்கும் பர்மன் இசையமைத்துள்ளார்.
ஆர்டி பர்மனின் தனித்துவம் மிக்க குரலுக்கு பல கோடி ரசிகர்கள் உண்டு. இன்றும் அவர்கள் பர்மனைக் கொண்டாடி வருகின்றனர். இவரது குரலில் வெளியான ‘ஷோலே’ படத்தின் ‘மெஹபூபா ஓ மெஹபூபா’ பாடல் இந்தியாவின் பட்டித்தொட்டிகளில் வாழ்ந்த மக்களைக் கூட கூத்தாட வைத்தது. தி ட்ரெயின் படத்தில் இடம்பெற்ற மேரிஜான் மெய்னே கஹான்… இன்றும் க்ளப்களில் ஹாட் பாட்டு. சனம் தேரி கஸம் படத்தில் ஜானா ஓ மெரி ஜானா… என்ற பாட்டு இப்போது கேட்டாலும் ஆட வைக்கும்.
பிரபல பாடகி ஆஷா போஸ்லேவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஆர் டி பர்மன், அவருடன் இணைந்து உருவாக்கிய பாடல்கள் அமரத்துவம் மிக்கவை. லதா மங்கேஷ்கருக்கு ஏராளமான ஹிட் பாடல்களைத் தந்த ஆர் டி பர்மன், ஆஷா போஸ்லேவுக்கு பல சவாலான பாடல்களைக் கொடுத்தார்.
கிட்டத்தட்ட முன்னூறு படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார் ஆர்.டி. பர்மன். இவரது இசையில் என்ன சிறப்பு என்றால், எழுபதுகளில் துவங்கிய டிஸ்கோ இசையைக் கச்சிதமாகத் திரைப்படங்களில் உபயோகித்ததே. நடனம் ஆடுவதற்கு ஏதுவான பல பாடல்கள் இவரால் இசையமைக்கப்பட்டு இளைஞர்கள் மத்தியில் மிகப்பிரபலம் அடைந்தன. ஆனால் உண்மையில் ஆர்.டி. பர்மனுக்கு இப்படிப்பட்ட க்ளப் பாடல்களை இசையமைப்பதில் விருப்பமே இருந்ததில்லை. மெலடிகள்தான் ஆர்.டி. பர்மனின் விருப்பத்துக்கு உகந்தவை. இருப்பினும், இயக்குநர்களின் அசைக்கேற்ப டிஸ்கோ பாடல்களை இசையமைத்து, அவற்றிலும் பல சூப்பர்ஹிட்களைக் கொடுத்தார் பர்மன்.
ராஜேஷ் கன்னா – ஆர்.டி. பர்மன் – கிஷோர் குமார் ஆகியோர்களின் கூட்டணி மிகவும் பிரபலம். கிட்டத்தட்ட முப்பது படங்கள் ராஜேஷ் கன்னாவுக்கு ஆர்.டி. பர்மன் இசையமைத்திருக்கிறார். கிஷோர் குமார், எஸ்.டி. பர்மனுக்கு மட்டுமல்லாமல் ஆர்.டி. பர்மனுக்கும் உற்ற நண்பர் என்பதால் கிஷோர்குமாரே பல பாடல்களை ஆர்.டி. பர்மனின் இசையில் பாடியிருக்கிறார். அதேசமாம் முஹம்மது ரஃபிக்கும் ஏராளமான ஹிட்கள் ஆர்.டி. பர்மனின் இசையில் உண்டு.
