

ஒரே நாளில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து இந்தியாவுக் கும்,தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இன்னிக்கு தனது ஐம்பது மூன்றாவது பிறந்த நாளை கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்!
“அல்லா ரக்கா ரகுமான்” என்பதன் சுருக்கமே ஏ.ஆர்.ரகுமான்.
தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னுடைய குடும்ப சூழ்நிலைக் காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார். அவருடைய தந்தை இறந்தபோது, அவருக்கு வயது ஒன்பது. ஒருமுறை இவருடைய சகோதரி நோயால் அவதியுற்ற போது, ஒரு முஸ்லீம் நண்பனின் ஆலோசனையின் பேரில் மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்ததன் விளைவாக இவருடைய சகோதரி முற்றிலும் நோயிலிருந்து விடுபெற்றார். இதனால் இவருடைய குடும்பம் இஸ்லாமிய மதத்திற்கு மாறியது. திலீப்குமார் என்ற பெயரை ஏ.ஆர். ரகுமான் என்று மாற்றிக் கொண்டார்.
ரகுமான், தன்னுடைய பதினொரு வயதில், இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர், எம்.எஸ். விஸ்வநாதன், ரமேஸ் நாயுடு, மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற இசை கலைஞர்களிடமும் பணியாற்றினார். இசைத்துறையில் ஏற்பட்ட ஆவலினால் “ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் கல்லூரியில்” கிளாசிக்கல் இசைத்துறையில் இசை பயின்று பட்டமும் பெற்றார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முதல் திரைப்படம் ‘யோதா’ என்ற மலையாள திரைப்படம்.ஆனால் முதலில் ரிலீஸ் ஆகியது ‘ரோஜா’ தான்.
ரோஜா படத்தின் கேசட் கவரில் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் இடம்பெறவே இல்லை.
எப்போதும் இசையில் பிசியாக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான்,தனது ஓய்வு நேரங்கள் முழுவதையும் குடும்பத்தினரோடு மட்டுமே கழிப்பார்.வெளி இடங்களுக்கு அதிகம் செல்வதில்லை.
ஏ.ஆர்.ரகுமானுக்கும் அவரது மகன் அமீன் ரகுமானுக்கும் ஒரே நாளில்தான் பிறந்த நாள்.
ரகுமான் ஒரு காபி பிரியர்.காபியில் நான்கில் ஒரு பங்கு அவருக்கு சர்க்கரை இருக்க வேண்டும்.
பழையதை எப்போதும் மறக்காதவர் ஏ.ஆர்.ரகுமான்.தான் வாசித்த முதல் கீபோர்டை இப்போதும் பராமரித்து வருகிறார்.
ரகுமானுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்த ‘ஜெய் ஹோ’ பாடல்,முதலில் சல்மான் கான் நடிப்பில் உருவான ’யுவ்ராஜ்’ திரைப்படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்டது.
ஒரே ஆண்டில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்ற முதல் ஆசியர் ஏ.ஆர்.ரகுமான் தான்.
