அனுபம் கெர் (Anupam Kher) ஒரு இந்திய நடிரும் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தற்போதைய தலைவரும் ஆவார். இவர் பல்வேறு மொழிகளிலும் 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் தோன்றியுள்ளார். இவர் முதன்மையாக இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் புகழ்பெற்ற சர்வதேசத் திரைப்படங்களில், அதாவது 2002 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படமான, ”பெண்ட் இட் லைக் பெக்காம்” ஆங் லீ யின் கோல்டன் லயன் வின்னிங் லஸ்ட், காசன் மற்றும் டேவிட் ஓ ரஸ்ஸலின் ஆஸ்கார் விருது வென்ற சில்வர் லைனிங்சு பிளேபுக் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அனுபம் கெர் சிறப்பாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தமைக்காக ஐந்து முறை பிலிம்பேர் விருது பெற்றார். 1988 ஆம் ஆண்டு விஜய் என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான விருதினைப் பெற்றுள்ளார்.
இவர் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் தலைவராகப் பதவி வகித்துள்ளார். தேசிய நாடகப் பள்ளியின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்திய அரசு 2004 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ விருதினையும் 2016 ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருதினையும் வழங்கிக் கௌரவித்துள்ளது.
இவரது மனைவி, நடிகை கிரோன் கெர் சண்டிகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
கெர் 7 மார்ச் 1955[4] இல் சிம்லாவில் காஷ்மீரி பண்டிட் குடும்பத்தில் பிறந்தார்.[5] இவரது தந்தை ஒரு எழுத்தராகப் பணிபுரிந்தார். அவர் இவரை வளர்த்து ஆளாக்குவதில் நடுநிலைமையாய் இருந்தார். அனுபம் கெர் சிம்லாவில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். மும்பையில் நடிகராகத் தன் போராட்டத்தைத் தொடங்கிய காலகட்டத்தில் இரயில்வே நடைமேடைகளில் துாங்கியுள்ளார்.[6] இவர் தேசிய நாடகப் பள்ளியில் முன்னாள் மாணவரும், முன்னாள் தலைவரும் ஆவார். இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்தில் இவர் தனது ஆரம்ப கால கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
கெர் 1982 ஆம் ஆண்டில் ஆக்மேன் என்ற முதல் இந்தித் திரைப்படத்தில் நடித்தார். 1984 ஆம் ஆண்டில் வந்த சாரன்சு படத்தில் 28-வயதான கெர் ஓய்வு பெற்ற மராட்டிய நடுத்தரக் குடும்ப, மகனை இழந்த தந்தையாக நடித்தார். இவர் சே நா சம்திங் டு அனுபம் அங்கிள், சவால் டஸ் க்ரோர் கா, லீட் இந்தியா, மற்றும் சமீபத்திய குச் பி ஹோ சக்தா ஹை போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சி ஷாருக் கானை விருந்தினராக அழைத்ததால் முதல் காட்சியிலேயே மாபெரும்  வெற்றியைப் பெற்றது. அவர் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ள போதிலும், சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் வில்லனாக நடித்த கர்மா என்ற படித்தில் இவரது தீவிரவாத கதாபாத்திரம் டாக்டர் டாங் புகழ் பெற்ற ஒன்றாகும். இவர் 1989 ஆம் ஆண்டு வெளியான டேடி என்ற படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்காக பிலிம்பேரின் கிரிடிக்ஸ் விருதினைப் பெற்றார். இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரம் சாரூக் கானுடன் தார் (1993), சமானா தீவானா (1995), தில் வாலே தில் துனியா (1995), சாகத் (1996), குச் குச் ஹோதா ஹை (1998), மொஹாபேடின் (2000) வீர் சாரா (2004), சப் தக் ஹை ஜான் (2012) மற்றும் ஹேப்பி நியூ இயர் (2012) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Related