Wednesday, April 30
Shadow

சென்னையில் நடிகர் கமல்ஹாசனுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நடிகர் கமலை இன்று அவரின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார். விமான நிலையத்தில் கமல் மகள் அக்ஷரா ஹாசன் கெஜ்ரிவாலை வரவேற்றார்.

டிவிட்டரில் நடிகர் கமல் தொடர்ந்து, அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றுவருவதாக கமல் ஹாசன் வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

கேரளத்தில் வெற்றிகரமாக ஓராண்டு ஆட்சியை கடந்த மே மாதம் நிறைவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசையும் அவர் பாராட்டினார். ஓணம் பண்டிகையையொட்டி கேரள முதல்வர் பினராய் விஜயனையும் சந்தித்தார்.
அரசியல் கற்கும் கமல்

இந்த நிலையில்தான், கமல் ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவும் வாய்ப்பிருப்பதாக ஊகம் எழுந்துள்ளது. கேரள முதல்வரை சந்திக்க சென்றபோது, தான் அம்மாநில அரசியலை கற்க வந்துள்ளதாக தெரிவித்தார் கமல்.
அரசியல் பேச்சு

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று கமல் சந்தித்தார். ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்திற்கு வந்த கெஜ்ரிவாலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தார் கமல். முன்னதாக மதியம் 1.30 மணியளவில் விமானத்தில் சென்னை வந்த கெஜ்ரிவாலை அக்ஷரா ஹாசன் வரவேற்றார். பிறகு கமல் வீட்டுக்கு கிளம்பி சென்றனர். கெஜ்ரிவாலுடனான சந்திப்பின்போது அரசியல் குறித்து கமல் பேசியதாக தெரிகிறது.
  தனிக்கட்சி

கமலுக்கு அரசியல் தெரியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். ஆனால் ஒரு பேட்டியில் தனி கட்சி தொடங்க உள்ளதாகவும் நடிகர் கமல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று கமல் சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் கெஜ்ரிவாலும் தனிக்கட்சி துவங்கி குறுகிய காலத்தில் ஆட்சியைபிடித்தவராகும்.
இடது பக்கம்

கமலை போலவே கெஜ்ரிவாலும் அடிப்படைவாத வலதுசாரி கொள்கைகளுக்கு எதிரானவர். பினராய் விஜயன், கெஜ்ரிவால் என கமல் சந்திப்பது அவர் தனது அரசியல் வாகனத்தை ‘இடப்புறமாக’ ஓட்டிச் செல்ல விரும்புவதன் அறிகுறி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Reply