மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார்.[2] ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தார். குணச்சித்திரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்) எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தார்.
வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
கேரள மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் மலபார் மாவட்டம், தற்போதய கண்ணூர் மாவட்டம், சிரக்கல் வட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் கேளு நம்பியார் என்பவருக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார் நம்பியார். இவருக்கு ஒரு தமையனாரும் ஒரு தமக்கையாரும் உள்ளனர். நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே தமையனார் வசித்து வந்த உதகமண்டலத்துக்குக் குடி பெயர்ந்து அங்குள்ள நகராட்சி உயர் பள்ளியில் மூன்றாம் பாரம் வரை படித்தார்.
1946 ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். பா.ஜ.கவின் முக்கிய தலைவராக இருக்கும் சுகுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா என்போர் இவரின் மற்ற குழந்தைகள் ஆவர்.
திரைப்படங்களில் எதிர் நாயகனாக நடித்த போதும், தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கங்களை கடைபிடித்துவந்தார். திரையுலகில் சிறந்த ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் அறியப்பட்டார். நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரி மலைக்குச் சென்று வந்தார்.
தொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால், தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராசமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து [5] சேலம், மைசூர் எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். வேடம் போட்டால் தான் சம்பளம். இலவசச் சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்தது.
உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் 2008, நவம்பர் 19 பிற்பகல் 12:30 மணியளவில் காலமானார்.

Related