Sunday, June 21
Shadow

நடிகை ராதிகா சரத்குமார் பிறந்த தினம் இன்று

தென்னிந்திய திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.

இலங்கையில் கொழும்பு நகரில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.

ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் முறை மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு.

எழுபதுகளின் இறுதியில் இளம் பெண்ணாக திரையுலகில் நுழைந்த ராதிகா சரத்குமார், 38 ஆண்டுகளுக்குப் பிறகும் சினிமா, தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் என வலம் வருகிறார்.

1993ல் வெளிவந்த கிழக்குச் சீமையிலே திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றிருந்த நேரம். விருமாயியாக அந்தப் படத்தில் நடித்திருந்த ராதிகாவுக்கு எல்லாத் திசைகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்த. 94ஆம் வருடத்தில் 6 படங்கள்; 95ஆம் வருடத்தில் 8 படங்கள் என நடித்துக் குவித்தார் அவர்.

இம்மாதிரியான சூழலில் யாருமே தொடர்ந்து சினிமாவில்தான் தீவிர கவனம் செலுத்தியிருப்பார்கள். ஆனால், ராதிகா சற்று நிதானமாக யோசித்தார். இப்படியே எவ்வளவு நாள் ஓட முடியும்? முதல் குழந்தையான ரெயான் பிறந்து சில மாதங்களே ஆகியிருந்தன. பாதையை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தார் ராதிகா.

அந்த யோசனையில் பிறந்ததுதான் ராடன் டிவி. தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்கும் நிறுவனம். ஜெயா டீவியின் முந்தைய அவதாரமான ஜேஜே டிவியில் பாலைவனப் புயல் என்ற தொடரைத் தயாரித்தார் ராதிகா. ஏகப்பட்ட இழப்பு. எதிர்பாராத இழப்பு.

ராதிகா முதலில் எடுத்த தொலைக்காட்சித் தொடர் தோல்வியில் முடிந்திருந்தது. அந்த காலகட்டத்தில்தான் இந்தி மெகா தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெளியாகிக்கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக மெகா தொடர்களின் முகம் மாறிக்கொண்டிருந்தது.

அதற்குப் பிறகு, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி என தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக தமிழ்த் தொலைக்காட்சியில் கோலோச்சிவருகிறார் ராதிகா. தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்கும் ராடன் மீடியா ஒர்க்ஸின் கடந்த ஆண்டு விற்று முதல் மட்டும் சுமார் 35 கோடி ரூபாய்.

1978ல் கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ராதிகா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் 210க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இன்னமும் நடித்துக்கொண்டும் இருக்கிறார்.

1994ல் தனிநபர் நிறுவனமாக துவங்கப்பட்ட ராடன் டிவி, 1999ல் கார்ப்பரேட் நிறுவனமானது. இந்த நிறுவனத்தின் மிக வெற்றிகரமான தொடர்களில் மையப் பாத்திரமாக ஒரு வலிமையான பெண்ணே இருப்பதாக கதைகள் இருக்கும். “பெண்கள்தான் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கிறார்கள் என்பது இதற்குக் காரணமல்ல. உண்மையில் எங்கள் தொடர்களை அதிகம் பார்ப்பது ஆண்கள்தான்” என்கிறார் ராதிகா.

விளையாட்டுப் பெண்ணாக சினிமாவில் நடிக்கத் துவங்கிய ராதிகா, தற்போது மிகத் திட்டமிட்டு வேலை பார்க்கும் ஒரு நபர். சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், அலுவலகம் என்று மிக பரபரப்பாக இருந்தாலும் 6 மணிக்கு மேல் வேலை பார்ப்பதில்லை.

பல தொடர்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், நடிகை, ஒரு அரசியல் தலைவரின் மனைவி என பரபரப்பாக இருக்கும் ராதிகா, “ஆண்களைவிடப் பெண்களால் நேரத்தை சிறப்பாக கையாள முடியும்” என்கிறார்.

“என் வாழ்க்கையில் எதையும் திட்டமிட்டு செய்ததில்லை. நான் நடிகையானது, தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தது, தயாரிக்க ஆரம்பித்தது எல்லாமே அந்த நேரத்தில் முடிவெடுத்து உழைத்ததுதான். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.” என்கிறார் ராதிகா.

உண்மையில் தான் எதிர்கொள்ளும் சவால்கள், தான் தேர்வு செய்த பாதையினால் வந்தவை என்கிறார் அவர். வெறும் நடிகையாக மட்டும் இருந்திருந்தால், இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்காது. ஆனால், இந்த உயரத்தையும் எட்டியிருக்க முடியாது என்கிறார் ராதிகா.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் எம்.ஆர். ராதாவுக்கும் இலங்கைத் தமிழரான கீதாவுக்கும் 1963ல் கொழும்பு நகரில் பிறந்தவர் ராதிகா. 1978ல் நடிக்க ஆரம்பித்து இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ராதிகா, சின்னத் திரை தொடர்களைத் தயாரிக்கும், டிவி கலை நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுக்கும் நிறுவனமான ராடன் மீடியா ஒர்க்ஸின் தலைவர். இவரது கணவர் சரத்குமார் பிரபல நடிகர், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர்.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

ஓ அந்த நாட்கள், எஸ் 3, சங்கிலி புங்கிலி கதவ தொற, தர்மதுரை, நானும் ரௌடி தான் ,சண்டமாருதம், தங்க மகன், பூஜை, சென்னையில் ஒரு நாள், கிழக்கே போகும் ரெயில், நிறம் மாறாத பூக்கள், இன்று போய் நாளை வா, போக்கிரி ராஜா, மூன்று முகம், ரெட்டை வால் குருவி, பூந்தோட்ட காவல்காரன், தைப் பொங்கல், ஊர்க்காவலன், கிழக்குச் சீமையிலே, வீரபாண்டியன், தெற்கத்தி கள்ளன், சிப்பிக்குள் முத்து, நல்லவனுக்கு நல்லவன், தாவணி கனவுகள், பசும் பொன், நானே ராஜா நானே மந்திரி, தூங்காதே தம்பி தூங்காதே, கேளடி கண்மணி, நினைவுச் சின்னம், பவித்ரா, ராசைய்யா, வீரத்தாலாட்டு, சூர்ய வம்சம், ஜீன்ஸ், தாஜ்மகால், அமர்க்களம், பூமகள் ஊர்வலம், ரோஜா கூட்டம், கண்ணா மூச்சி ஏனடா, பந்தயம், சகுனி , இரண்டாம் உலகம், அமர்க்களம்

இவர் தயாரித்த திரைப்படங்கள்

அண்ணாதுரை, சண்டமாருதம், இது என்ன மாயம், ஜக்குபாய், தலைமகன் – 2006 ( தமிழ் )

இவர் நடித்த தொலைகாட்சி தொடர்கள்

சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி