Wednesday, June 24
Shadow

நடிகை ஸ்ரீவித்யா மறைந்த தினம் இன்று

ஸ்ரீ வித்யாவை நினைக்கும் போதே ‘அதிசய ராகம், அபூர்வ ராகம்’ என்ற பாடலும் அதில் அவர் கண்களின் பேரெழிலும் நடிப்பாற்றலும் நம் கண்முன் தோன்றும்.

அந்தச் சிறப்புமிகு நடிகை இன்று இல்லை. புற்று நோய் முற்றியதால் அவர் அக். 19 அன்று மறைந்தார். மறையும் போது அவருக்கு வயது 53.

தன்னுடைய 13வது வயதில் ‘திருவருட்செல்வர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஸ்ரீவித்யா நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சுமார் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

‘சட்டம்பிக்காவல்’ என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகுக்கு அறிமுகமான இவர், மலையாளத்தில் மட்டும் 200 படங்களில் நடித்துள்ளார்.

‘இமயம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘புன்னகை மன்னன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலுக்கு மரியாதை’, ‘தளபதி’, ‘நம்மவர்’ உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இவரின் தந்தை அகடம் கிருஷ்ணமூர்த்தி தாயார், புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி எம்.எல். வசந்தகுமாரி,

கணவர், மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் ஜார்ஜ், ஸ்ரீவித்யா கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவரைப் புற்று நோய் தாக்கியது. ஆயினும் அவர் இடையிடையே தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடித்துவந்தார்.
பிறகு அந்தத் தொடரிலிருந்து பாதியிலேயே விலகிக் கொண்டார் நடிகை ஸ்ரீவித்யா.

பின்னர் உடல் நலக் குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு அவர் புற்று நோய்க்காக நீண்ட காலம் மருத்துவ சிகிச்சை (கீமோதெரபி) எடுத்துவந்தார்.

அக். 19 அன்று மாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.