Friday, January 17
Shadow

அருண் விஜய் நடிக்கும் ‘மாஃபியா’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

‘மாஃபியா’ படத்துக்கான தன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இயக்குநர் கார்த்திக் நரேனை பாராட்டியுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘மாஃபியா’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் சில நாட்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது.

ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறார்கள். இதில் ப்ரியா பவானி சங்கரின் படப்பிடிப்பு இன்றுடன் (ஆகஸ்ட் 17) முடிவடைந்துள்ளது. படுவேகமாக படப்பிடிப்பு முடிந்திருப்பதற்கு இயக்குநர் கார்த்திக் நரேனை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பாராட்டியுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

இது தொடர்பாக தன் பதிவில், “’மாஃபியா’ படத்தில் எனது காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மகிழ்ச்சியான, உற்சாகமான, மிக வேகமாக நடந்த படப்பிடிப்பு. கார்த்திக் நரேனின் 3 பவுண்ட் எடை கொண்ட விசேஷ மூளையின் திறன் பற்றி நாங்கள் இன்னும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அருண் விஜய், நீங்கள் கனிவு, அர்ப்பணிப்பு, விடா முயற்சி, திறமை, நேர்மறை எண்ணம் எல்லாம் மொத்தம் கொண்ட ஒரு ஆச்சரியமான நபர். எனக்கு எதிர்பாராமல் கிடைத்த நண்பர். ஒரு மாதம் விடாமல் படப்பிடிப்பு நடந்தது போலவே எங்களுக்குத் தெரியவில்லை.

குழுவில் இருக்கும் அனைவரும் இந்தப் படப்பிடிப்பை மறக்க முடியாததாக, விசேஷமானதாக மாற்றினீர்கள். இப்படிப் பல காரணங்களுக்காக ‘மாஃபியா’ எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமான படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் என் அன்பு. பி.கு – இவ்வளவு மகிழ்ச்சி இருந்தாலும் இது சீரியஸான படம் தான்” என்று தெரிவித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

‘மாஃபியா’ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டதால், தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.