Friday, February 7
Shadow

இயக்குனர் சி. வி. இராசேந்திரன் மறைந்த தின பதிவு

சி. வி. இராசேந்திரன் ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் முன்னணி தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதரின் சகோதரர் ஆவார்.

இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் அடிப்படையில் ஒரு எழுத்தாளர் அந்த காலத்தில் பத்திரிகைகளில் சிறுகதை, நாவல் எழுதியிருக்கிறார். சைதாப்பேட்டை தாலுகா அலுவலகத்தில் கிளர்க்காக வேலை பார்த்தவர். அந்த வேலை பிடிக்காமல் ராஜினாமா செய்து விட்டு ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

அனுபவம் புதுமை என்கிற படம் தான் முதலில் இயக்கியது. அந்தப் படம் தோல்வி அடைந்ததால் மீண்டும் ஸ்ரீதரிடமே உதவி இயக்குனராக சேர்ந்தார். சிவாஜி, ஸ்ரீதர் படங்களில் நடித்தபோது அவருக்கு நெருக்கமான நண்பர் ஆனார். சிவாஜி சிபாரிசின் பேரில் கலாட்டா கல்யாணம் என்ற படத்தை இயக்கினார். அது பெரும் வெற்றி பெற்றது.

ஜெய்சங்கர் ஜேம்ஸ்பாண்டாக பல படங்களில் நடித்தார். அவரை முதன் முதலாக ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வைத்தது சி.வி.ராஜேந்திரன் (படம்: நில் கவனி காதலி) குடும்ப ஹீரோவாக இருந்த சிவாஜியை ராஜா படத்தின் மூலம் கமர்ஷியல் ஹீரோவாக்கினார். எம்.ஜி.ஆர் படத்தையும் விஞ்சிய வசூலை அது கொடுத்தது.

முதன் முதலாக அதிக படங்களை ரீமேக் பண்ணியது சி.வி.ராஜேந்திரன் தான். ராஜா, நீதி, உனக்காக, என் மகள் உள்பட 10க்கும் மேற்பட்ட இந்திப் படங்களை ரீமேக் பண்ணினார்.

6 ஆண்டுகள் பெங்களூரில் தங்கியிருந்து கன்னட படங்களை இயக்கினார். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் கன்னடப் படத்தை இயக்கியதும் இவர்தான். கமலை வைத்து உல்லாச பறவைகள் படத்தையும், ரஜினியை வைத்து கர்ஜனை படத்தையும் இயக்கினார்.

பிரபுவை தான் இயக்கிய சங்கிலி படத்தின் மூலம் சினிமாவுக்கு கொண்டு வந்தார். போலீஸாகும் பயிற்சியில் இருந்த பிரபுவை வற்புறுத்தி சினிமாவுக்கு கொண்டு வந்தார்.வாழ்க்கை படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக அம்பிகாவை நடிக்க வைத்து பரபரப்பு கிளப்பினார்.

சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சிவாஜியை ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்தார்.50 படங்களை இயக்கியுள்ளார். சத்யராஜ் நடித்த சின்னப்பதாஸ் தான் இவர் இயக்கிய கடைசி படம்.மு.க.ஸ்டாலின் நடித்த குறிஞ்சிமலர் தொலைக்காட்சி தொடரை இயக்கியதும் சி.வி.ராஜேந்திரன் தான்.

இவர் இயக்கிய திரைப்படங்கள்: நெஞ்சம் மறப்பதில்லை தமிழ், காதலிக்க நேரமில்லை, கலைக்கோவில், வெண்ணிற ஆடை, கொடிமலர், நெஞ்சிருக்கும் வரை, அனுபவம் புதுமை, கலாட்டா கல்யாணம், நில் கவனி காதலி, வீட்டுக்கு வீடு , புதிய வாழ்க்கை, சுமதி என் சுந்தரி, நவாப் நாற்காலி, ராஜா, நீதி, நியாயம் கேட்கிறோம், பொன்னூஞ்சல், மாந்தரில் மாணிக்கம், என் மகன் தமிழ், சிவகாமியின் செல்வன், வாணி ராணி, மாலை சூடவா, உனக்காக நான், வாழ்த்துங்கள், உல்லாசப்பறவைகள், கர்ஜனை, தியாகி, சங்கிலி, லாட்டரி டிக்கட், புதிய தீர்ப்பு, சந்திப்பு, வாழ்க்கை, ராஜா வீட்டு கண்ணுக்குட்டி, உங்கள் வீட்டு பிள்ளை, உனக்காக ஒரு ரோஜா, பெருமை, பொய் முகங்கள், ராஜா நீ வாழ்க, ஆனந்த், சின்னப்பதாஸ்

இவர் தயாரித்த படங்கள்:  ஒன்ஸ்மோர், வியட்நாம் காலனி