Friday, May 1
Shadow

மின்னல் வேகத்தில் வளரும் மணிரத்தினத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன. ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்யும் இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இடையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் போராட்டத்தில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங், தற்போது வேகவேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில், தன்னுடைய போர்ஷன் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் அரவிந்த் சாமி.

“செக்கச் சிவந்த வானம் படத்தில் என்னுடைய வேலை முடிந்துவிட்டது. மணி சார், சந்தோஷ் சிவன் மற்றும் குழுவினருடன் பணியாற்றுவதில் இது ஒரு சலுகை. ‘செக்கச் சிவந்த வானம்’ ஸ்பெஷல் படம், அதை உணர முடியும். சிறிது ஓய்வுக்குப் பிறகு 11 ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் புரமோஷனைத் தொடங்க வேண்டும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அரவிந்த் சாமி.

படத்தில் நிறைய ஆர்ட்டிஸ்ட் என்பதால், ஷூட்டிங் ஸ்பாட் கலகலப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதிக்கு சிம்பு சாப்பாடு ஊட்டிவிடும் புகைப்படம் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது சிம்புவுடன் செல்ஃபீ எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் அருண் விஜய்.