Friday, April 24
Shadow

அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ படப் பாடலை வைரலாக்கிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ படப் பாடலை வைரலாக்கிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், நடிகர் கார்த்தி – இயக்குநர் நலன் குமாரசாமி கூட்டணியில் உருவாகியுள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது வரை வெளியாகிய டீசரும் இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் இணைந்து பாடிய ஒரு ரீமிக்ஸ் பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிரபலமான “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” பாடலை இருவரும் இணைந்து பாடியுள்ள இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பேசப்படும் பதிவாக மாறியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நடிகர் கார்த்தி, சந்தோஷ் நாராயணனின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நடிகை கீர்த்தி ஷெட்டி, நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், பாடகர் விஜய் ஏசுதாஸ் உள்ளிட்ட திரைத்துறையினரும் வீடியோவை பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

படத்தில் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த ரீமிக்ஸ் பாடல் படத்தில் இடம்பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி, பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிடவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வா வாத்தியார் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தனித்துவமான கதைமுகங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் கார்த்தி மற்றும் புதுமையை முன்னிறுத்தும் இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்திருப்பது, இந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

இப்படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி.எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை மேற்கொண்டிருக்கிறார். இசை – சந்தோஷ் நாராயணன், கலை இயக்கம் – டி.ஆர்.கே. கிரண், எடிட்டிங் – வெற்றி, சண்டைக் காட்சிகள் – அனல் அரசு.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்தின் டிரெய்லரும் இசை வெளியீட்டு அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது.

திரைப்படம் டிசம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.