Saturday, November 7
Shadow

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே

லஷ்மி அகர்வால். பிறந்ததில் இருந்தே ஏகப்பட்ட பிரச்னைகளையும், சோகங்களையும் மட்டுமே சந்தித்து வாழ்பவள்.

1990-ம் வருஷம் டெல்லியில் பிறந்த போது, அவளது குடும்பம், தங்குவதற்கு ஒரு வீடுகூட கிடையாது. கனமழை கொட்டித்தீர்க்க, அவளது அப்பாவும், அம்மாவும் பிறந்த நான்கு நாளே ஆன பிஞ்சுடன் அருகில் ஒரு பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் தஞ்சம் புகுந்தனர். அம்மா ராதா, குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.

தன் மனைவியும் குழந்தையும் நனையாதவாறு தானே குடையாக மாறி நின்றார் முன்னா லால். சமையல்காரரான அவர், தன் பேரழகு மகளுக்கு ‘லஷ்மி’ என ஆசையுடன் பெயரிட்டார். அவளுக்குப் பிறகு மகன் ராகுல் பிறந்தான். அவர்களின் வாழ்க்கையில் வாய்க்கும் வயிற்றுக்கும் இடையே வறுமை விளையாடியது.

லஷ்மிக்கு, சிறுவயது முதலே தேவதைக் கதைகளில் ஆர்வம். அதுவும் சிண்ட்ரெல்லா, அவளது பிரியத்துக்கு உரியவள். தன்னை ஒரு சிண்ட்ரெல்லாவாகவே அவள் கருதினாள், கந்தல் உடை அணிந்த ஏழை சிண்ட்ரெல்லா. லஷ்மிக்கு இந்திப் படங்கள் என்றால், உயிர். டி.வி-யில் சினிமா பாடல்கள் வரும்போது அதைப் பாடியபடி ஆடுவது பொழுதுபோக்கு. பருவக் கனவுகளுடன் வளர்ந்த லஷ்மி, டி.வி ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு பாடினாள்; ஆடினாள்; பேசினாள்; தன் திறமைகளை வெளிப்படுத்தினாள்.

2005-ம் ஆண்டு. 15 வயது லஷ்மியின் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்தது (ஏப்ரல் 18) ‘ஐ லவ் யூ’. அனுப்பியவன் பெயர் குட்டு என்கிற நஹிம் கான். 32 வயது ஆள். லஷ்மிக்கு ஒரு தோழி இருந்தாள். அந்தத் தோழிக்கு ஒரு காதலன் இருந்தான். அந்தக் காதலனின் சகோதரனே குட்டு. லட்சணமான லஷ்மி மீது அவனுக்கு ஒருதலைக் காதல். பல மாதங்களாக லஷ்மியைச் சுற்றிச் சுற்றி வந்து இம்சை செய்தான். அடுத்ததாக மொபைலில் காதல் தூது. ‘உடனே பதில் சொல்’ என மறுநாளும் மெசேஜ் வந்தது. அவனைக் கண்டாலே, லஷ்மிக்குப் பிடிக்காது. அவனது தொல்லைகளில் இருந்து தப்பிப்பது எப்படி? தவித்தாள். ஆனால், எந்தப் பதிலும் அனுப்பவில்லை.

 

மூன்று நாட்கள் கழித்து, டெல்லியின் கான் மார்க்கெட் பகுதியில் லஷ்மி பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தாள். பகல் பொழுது. கூட்டம் நிறைந்த பகுதி. நஹிம் அங்கே ராக்கி என்கிற பெண்ணுடன் வந்தான். லஷ்மி பயந்து நடுங்கினாள். வந்தவன் லஷ்மியை நெருங்கி அவளைத் தள்ளிவிட்டான். தான் மறைத்து வைத்திருந்த ஒரு பாட்டிலை எடுத்தான். அதைத் திறந்து, கீழேகிடந்த லஷ்மியின் முகம், கழுத்துப் பகுதியில் ஊற்றினான். ஆசிட்!

முதலில் ஏதோ தண்ணீர் தெளித்ததுபோல் உணர்ந்த லஷ்மி, அடுத்தடுத்த நொடிகளில் எரிச்சலை உணர்ந்தாள். மகா எரிச்சல்… பெரும் வலி. கைகளால் தடவினால், தோல் கையோடு உரிந்துகொண்டு வந்தது. உடல் எங்கும் நெருப்பின் தகிப்பு. கைகளால் கண்களை மூடிக்கொண்டு அலறித் துடித்தாள் லஷ்மி. யாரும் ஓடிவந்து தூக்கவில்லை. உதவி கேட்டுக் கதறிய சக மனுஷியைக் கண்டு பதறி, விலகி ஓடி வேடிக்கை பார்த்தனர். மேல் தோலும் உட்புறத் தோலும் சதையும் கருகும் வாடை. லஷ்மியின் காது மடல்கள் உருகிக் கரைந்தன. முகமும் உடலில் பல பகுதிகளும் கருகிப்போயின. உச்சமான எரிச்சல், வலி. துடித்த லஷ்மியை வேடிக்கை பார்த்தபடி வேகமாகக் கடந்துபோனது ஒவ்வொரு வாகனமும்.

ஓர் அரசியல்வாதியின் கார் வந்து நின்றது. மனிதாபிமானம் உள்ள அதன் ஓட்டுநர், காரில் இருந்து இறங்கி லஷ்மியைத் தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். சம்பவ இடத்திலேயே யாராவது முதல் உதவி செய்திருந்தால் அல்லது மருத்துவமனைக்கு இன்னும் முன்னதாகவே கொண்டுவந்திருந்தால் பாதிப்பு குறைவாக இருந்திருக்கும் எனப் பரிதாப ‘உச்’ கொட்டினர் மருத்துவர்கள். சிகிச்சைகளும் அறுவைசிகிச்சைகளும் வாரக்கணக்கில் தொடர்ந்தன. கைகளால் முகத்தை மூடிக்கொண்டதால் கண் பார்வை தப்பித்தது. ஆனால் முழு முகம், கழுத்துப் பகுதி, வலது கை, நெஞ்சுப் பகுதி ஆகியவை பெருமளவில் வெந்துபோயிருந்தன. 10 வார சிகிச்சைக்குப் பிறகு, சிதைந்த முகத்துடன் வீடு திரும்பினாள் லஷ்மி.

அந்த லஷ்மி இப்போது Stop Acid Attacks என்ற அமைப்பின் மூலம் தன்னைப்போல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு (ஆண்களுக்கும்) மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்வது, அவர்கள் மனம் தளராதவிதத்தில் கவுன்சலிங் கொடுப்பது, அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது என தொடர்ந்து செயலாற்றி வருகிறார் .

லஷ்மியின் இந்தச் சமூக அக்கறையை அங்கீகரிக்கும்விதமாக NDTV, 2014-ம் ஆண்டு International ‘Unsung Hero of the Year’ விருதை வழங்கி கௌரவித்தது. சர்வதேச அங்கீகாரமாக International Women of Courage Award- ம் லஷ்மிக்கு வழங்கப்பட்டது. வாஷிங்டனில் நடந்த விழாவில் விருது வழங்கிய மிச்சேல் ஒபாமா, லஷ்மியை அன்புடன் ஆரத் தழுவிக்கொண்டார்.

மேலும் நியூஸ் எக்ஸ் சேனலின் Udaan என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகியிருக்கிறார் லஷ்மி. சமூகத்தில் பலவிதங்களில் பாதிக்கப்பட்ட நபர்களை தொடர்ந்து பேட்டி எடுத்துவருகிறார். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், மற்றவர்களது சோகத்தை வெளிக்கொண்டுவந்து குரல் எழுப்பும் இந்தச் சமூக விழிப்புஉணர்வு நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்பேர்பட்ட பெண் லட்சுமி அகர்வால் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் தான் ‘சபாக்’. பாஜிராவ் மஸ்தானி, சென்னை எக்ஸ்பிரஸ், பத்மாவதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த தீபிகா படுகோனே நடித்துள்ள இந்த படத்தில் தீபிகா நடித்தது மட்டுமின்றி தயாரித்தும் உள்ளார் .தீபிகா படுகோனே உடன் விக்ராந்த் மாஷி நடித்துள்ளார் .மேக்னா குல்சார் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர் . ‘ராஸி’ படத்தை இயக்கிய மேக்னா குல்சார் இயக்கியுள்ளார் .

‘சபாக்’ திரைப்படம் 2020 ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வருகின்றது