Saturday, November 7
Shadow

இயக்குநர் கே. பாக்யராஜ் பிறந்த தின பதிவு

கவிஞர் வைரமுத்து சொன்னது போல் ‘ஒரு சிறிய தீக்குச்சிக்குள் பெரிய தீயே அடங்கி இருப்பது போல் கே. பாக்யராஜ் அவர்களிடம் நடிப்புத் திறமை, கதை, வசனம், ஜோக்கு, பாடல் போன்ற அத்தனை அம்சங்களும் ஒருங்கே அமைந்த பலக் காட்சிகளை வெண்திரை மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் தகுதி படைத்தவர்’ பாக்யராஜ்.

இந்தியத் திரையுலகின் ‘திரைக்கதை ஜித்தன்’ கே.பாக்யராஜ். பாக்ஸ் ஆபீஸ் வசூல், ரசிகர்களின் விசில் இரண்டும் சம்பாதிக்கும் திரைக்கதைகள் புனையும் கலைஞன்.

1978-ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜா முதல் படம் இயக்கும்போது, பாக்யராஜ் அதில் உதவியாளராக, தமது திரை வாழ்க்கையை துவங்கினார்.

பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தில் உதவி இயக்குனர் மற்றும் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார்.

பாரதிராஜாவின் மூன்றாவது படமான ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் இரண்டு காட்சிகளில் நினைவில் நிற்கும்படியான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்தார். இப்படத்திற்கு வசனமும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அடுத்த படமான ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார்.
ஒரு இயக்குனராக தமது முதல் படமாக பாக்யராஜ் உருவாக்கியது ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’. (இடைக்காலத்தில் அவர் ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமான ‘கன்னிப்பருவத்திலே’ படத்தில் வில்லன் வேடம் ஏற்று தனது இருப்பைப் பதிவு செய்திருந்தார்). முதல் படத்தில் சுதாகர் கதாநாயகனாகவும் சுமதி நாயகியாகவும் நடிக்க, ஒரு குணச்சித்திரப் பாத்திரத்தை பாக்யராஜ் ஏற்றிருந்தார். நகைச்சுவையும், சோகமும் சரிபாதியாக அதில் அமைந்திருந்தது.

அடுத்து, சொந்த தயாரிப்பான ‘ஒரு கை ஓசை’ திரைப்படம் துவங்கி தனது முத்திரையை பதிக்கத் தொடங்கினார். அஸ்வினி இணைந்து நடித்த இப்படத்தில் அவர் வாய் பேச இயலாத ஊமைக் கதாநாயகனாக மேற்கொண்ட பாத்திரம் இரசிகர்களின் மனம் கவர்ந்தது.

அடுத்து வெளியான ‘மௌன கீதங்கள்’ ‘இன்று போய் நாளை வா’, ஆகியவை பாக்யராஜின் முத்திரையை முழுமையாகக் கொண்டு, மாபெரும் வெற்றிப் படங்களாயின. அடுத்து ஒரு மர்மங்கள் மற்றும் அதிரடி கொண்ட அதேசமயம் தனது முத்திரையுடனும் கூடிய ஒரு படமாக ‘விடியும் வரை காத்திரு’ என்னும் திரைப்படத்தைப் பாக்யராஜ் இயக்கி நடித்தார்.
பாக்யராஜின் முத்திரை முழுமையாகப் பதிந்து, மாபெரும் வெற்றி ஈட்டிய திரைப்படங்கள் ‘அந்த 7 நாட்கள்’, ‘தூறல் நின்னு பேச்சு’ போன்றவை. பின் ‘டார்லிங் டார்லிங்’ வெற்றிப்படத்தை இயக்கி அதில் நடித்த பூர்ணிமாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். பின், 1982 ம் ஆண்டு வெளியான ‘முந்தானை முடிச்சு’. ஊர்வசி அறிமுகமான இத்திரைப்படம் சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெள்ளி விழா கொண்டாடியது.

இதில் பாக்யராஜ் கையாண்ட சில விஷயங்கள் (முருங்கைக்காய் போன்றவை) இன்றளவும் பேசப்படுகிறது. அதிலும் ஏவி.எம் நிறுவனத்தினர், அவர்களது ஆஸ்தான இயக்குநர்களான ஏ.சி.திருலோக சந்தர், எஸ்.பி.முத்துராமன் ஆகியோரை வைத்து தான் அப்போது படங்கள் தயாரித்துக்கொண்டு இருந்தனர். முதன்முதலாக அந்தப் பழக்கத்தை விடுத்து, ‘முந்தானை முடிச்சு’ பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்தது!

இது குறித்து ஏ வி எம் சரவணன் சொன்ன தகவல்கள் சுவையானவை :

12.7.1983ல் முந்தானை முடிச்சு திரைப்படம் எடுத்தோம். பாக்யராஜ் அவர்கள் கதையை ரெடி பண்ணிட்டேன் கேட்கறீர்களா என்றார். கேட்டோம். நான் எந்தக் கதையானாலும் என் ரூமில்தான் கேட்பது வழக்கம். உங்கள் ஆபிசில் கேட்கக்கூடாது. பாம்குரோவில் ரூம் நம்பர் 88ல் ரிசர்வ் பண்ணி வச்சுருக்கேன். அங்கேதான் வந்து கதையைக் கேட்க வேண்டும் என்றார். ஆபிசில் முக்கிய வி.ஐ.பி யாராவது வருவாங்க. முக்கிய டெலிபோன் வரும். நான் கதை சொல்லும்போது எந்தவித டிஸ்டர்பென்சும் இருக்கக் கூடாது.

என்னடா இது யாரும் கதை சொல்லாத மாதிரி புதுசா கதை சொல்கிறேன் என்கிறாரே என்று அப்போது நினைத்தது உண்மை. அடுத்த நாள் காலையில் அவர் சொன்னபடி பாம்குரோவ் ரூம் நம்பர் 88க்கு போனோம். அவர் அஸிஸ்டண்ட் எல்லோரையும் வெளியே இருக்கச் சொன்னார். நாங்கள் உள்ளே போனோம். அவர் ஃபைல் வச்சிருப்பாரோ, ஸ்கிரிப் பிலிங் பாட்.

பென்சில் ஏதாவது வைச்சிருப்பாரோ என்று நினைத்தோம். ஒன்றும் வைத்துக் கொள்ளவில்லை. சார் நீங்க ரெடியா, கதை சொல்லலாமா என்று கேட்டார் நாங்க ரென்னோம். கதையை சொல்ல ஆரம்பித்தார். மிக அற்புதமாகக் கதையைச் சொன்னார். இந்த இடத்தில் பிரீஸ் இடைவேளை என்று சொன்னார். எங்களுக்கெல்லாம் காப்பி கொண்டு வர சொல்லிவிட்டு அவர் வெளியே போனார்.

அவர் திரும்ப வந்ததும் காப்பி சாப்பிட்டீங்களா, கதையை சொல்லட்டுமா என்று கேட்டுவிட்டு கதையை சொல்ல ஆரம்பித்தார். கதையை சொல்லி முடித்தார். பைல் இல்லை. ஒரு பேப்பர் இல்லை. பேனா இல்லை. முழு திரைக்கதையையும் சொன்னார். நான் அம்மாதிரி திரைக்கதையை அதற்கு முன்னும் கேட்டதில்லை. அதற்குப் பிறகும் கேட்டதில்லை. அவ்வளவு அற்புதமாக திரைக்கதை சொன்னார். அவர் முடித்தவுடன் சொன்னேன். பாராட்டுக்கள். உங்கள் கிரீடத்திற்கு மற்றொரு வைரம் என்று சொன்னேன். எங்க தந்தையார் இந்த மாதிரி திரைக்கதையை கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவார். அவர் இன்று இல்லையே என்ற வருத்தத்தையும் அவரிடம் தெரிவித்தேன் அப்படீன்னு சொல்லி இருந்தார் ஏ வி எம் சரவணன்.