Friday, December 6
Shadow

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது – திரைவிமர்சனம்

காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கும் சமூக சேவகரும், அதனால் வரும் பிரச்சினைகளும்.

நடிகர்-நடிகைகளுக்கு கேரவன்களை வாடகைக்கு விடும் தொழில் செய்பவர் கவுண்டமணி. இவர் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதை சமூக கடமையாக செய்து வருகிறார். இதனால் எதிர்ப்புகளுக்கு ஆளாகிறார்.

தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களை அழைத்துக்கொண்டு கேரவனில் வெளியூருக்கு சுற்றுலா கிளம்புகிறார். அப்போது அவரது மனைவியிடம் ஜோதிடர் உங்கள் கணவருக்கு கெட்ட நேரம் ஆரம்பமாகிறது. வெளியூர் பயணம் கூடாது என்று எச்சரிக்கிறார்.

பயந்து போன அவர் கணவரின் பயணத்தை நிறுத்துவதற்காக பின்னாலேயே இன்னொரு கேரவேனில் புறப்படுகிறார். மதுரையில் சமூக சேவை பணிகளில் ஈடுபடும் இளைஞர் சவுந்தர்ராஜாவுக்கும் உள்ளூர் அரசியல்வாதி மகள் ரித்விகாவுக்கும் காதல் மலர்கிறது.

இருவரும் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடுகிறார்கள். அவர்களை கூலிப்படை துரத்தி பாதி வழியில் மடக்குகிறது. அப்போது அந்த வழியாக வரும் கவுண்டமணி ரவுடிகளை விரட்டி காதல் ஜோடியை மீட்கிறார். அவர்களை சேர்த்து வைப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். அது நடந்ததா? என்பது கிளைமாக்ஸ்.

கவுண்டமணி கேரவன் மணி கதாபாத்திரத்தில் நகைச்சுவை, கேலி, கிண்டல் வசனங்கள் என்று படம் முழுக்க சிரிப்பு தர்பார் நடத்துகிறார். கேரவன்களை எந்த நடிகர்-இயக்குனருக்கு எந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று இவர் பட்டியலிடும் காட்சிகள் தியேட்டரை குலுங்க வைக்கிறது.

கதாநாயகிகள் தங்கள் பெயர்களுடன் சாதிப்பெயரை சேர்த்து இருப்பதை நய்யாண்டி செய்து பிறகு இதற்காக அந்த நடிகைகள் தன்னை கோர்ட்டுக்கு இழுத்து இருப்பதாக சொல்வது ஆரவாரமான நகைச்சுவை.

அரசியல்வாதிகள் மற்றும் மூட பழக்க வழக்கங்களையும் சகட்டு மேனிக்கு சாடுகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பழைய கவுண்டமணியின் நகைச்சுவையை ரசித்த திருப்தி. அரசியல்வாதிகளின் அடாவடிகளை வழக்கு போட்டு சந்திக்கு இழுக்கும் துடிப்பான இளைஞராக வருகிறார் சவுந்தர்ராஜா.

ரித்விகா காதல் காட்சிகளில் கவர்கிறார். சனா அன்பான மனைவியாக வருகிறார். வேல்முருகன், வளவன், மூணார் ரமேஷ் கதாபாத்திரங்களும் அம்சம்.

கேரவன் பயணத்தில் அதிக காட்சிகள் முடங்குவது சலிப்பு. அதையும் மீறி சிரித்து ரசிக்க வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் கணபதி பாலமுருகன்.

Leave a Reply