பாலியல் தொல்லை கொடுத்ததாக நடனப்பள்ளி ஆசிரியர் மீது நடிகை அமலாபால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்,
நடிகை அமலா பால் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நடிகை அமலாபால் நடனப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
நடன வகுப்பின் போது டான்ஸ் மாஸ்டர் தன்னிடம் ஆபாசமாக பேசி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அமலாபால் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஏஎல் விஜயை காதல் திருமணம் செய்து கொண்ட அமலாபால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து பெற்றார். தற்போது தனியாக வசித்து வரும் அவர் படங்களில் பிஸியாக உள்ளார்.
நடிகை அமலா பாலின் பாலியல் புகாரை தொடர்ந்து சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த அழகேசன் என்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அழகேசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் சொகுசு கார் வாங்கியதில் மோசடி செய்ததாக நடிகை அமலாபால் மீது சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நடிகை அமலாபால் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.