Wednesday, April 22
Shadow

ரஜினியின் காலாக்கு சிக்கல் மேல் சிக்கல் 101 கோடி கேட்டு வழக்கு

காலா படக்கதை விவகாரம் தொடர்பாக, 101 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, வழக்கு தொடரப்படும் என, நடிகர் ரஜினிக்கு, மும்பையை சேர்ந்த ஜவஹர் என்பவர், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மும்பையில் வாழ்ந்த தமிழர், திரவியம் நாடார். இவரது மகனான ஜவஹரின் வழக்கறிஞர், ரஜினிக்கு அனுப்பியுள்ள, நோட்டீசில் கூறியிருப்பதாவது: காலா படம், மும்பையில் வாழ்ந்த தமிழரான, திரவியம் நாடாரின் கதையை மையமாக வைத்து, எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

திரவியம் நாடார், மும்பை தமிழர்களுக்காக பாடுபட்டார்; பல கொடுமைகளை அனுபவித்து வந்த தமிழர்களுக்கு, காவலராக விளங்கினார். அங்குள்ள மக்கள், காட்பாதர் என, பொருள்படும் வகையில், திரவியம் நாடாரை, குட்வாலா சேட் என்றே அழைப்பர்.

ஆனால், நிஜத்திற்கு விரோதமாக, படத்தில், காட்வாலா சேட் என்ற பெயரும், இன வேறுபாட்டை துாண்டுவது போன்ற, காட்சிகளும் இருப்பதாக தெரிகிறது. என் தந்தை சட்டவிரோதமான செயல்கள் எதிலும் ஈடுபடாதவர். இப்படத்தால், எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

எனவே, அவருக்கும், காலாவுக்கும் என்ன சம்பந்தம் என்பதற்கு, ரஜினி, தனுஷ் ஆகியோர், 36 மணி நேரத்தில், எழுத்துப்பூர்வமாக, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்; விளக்கமும் அளிக்க வேண்டும். இல்லையேல், வழக்கு தொடரப்படும்; படம் வெளிவர அனுமதிக்க மாட்டோம். அவதுாறு ஏற்படுத்தியற்காக, 101 கோடி ரூபாயை ரஜினி தர வேண்டும். இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது