Wednesday, April 22
Shadow

டிராஃபிக் ராமசாமி’ படத்துக்கு கமல்ஹாசன் பாராட்டு !

ஜூன் 22-ல் அதாவது வரும் வெள்ளியன்று வெளியாகும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தைப் பற்றி கமல்ஹாசன் பாராட்டிக் கூறியுள்ளார்.

சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில்
உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ . இப்படத்தில் டிராஃபிக்
ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக
இருந்த விக்கி படத்தை இயக்கியுள்ளார். பாலமுரளி பாலா இசையமைத்துள்ளார், குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரித்துள்ளது,

‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் முன்னோட்டம் பார்த்த கமல்ஹாசன் படத்தைப் பாராட்டிக் கூறியுள்ளார். அவர் பேசும் போது ,

“அஹிம்சைதான் சிறந்த வீரம் என்பதை உலகிற்கே உணர்த்திய நாடு இந்தியா.மகாவீரர் காலத்தில் தொடங்கி இது வெவ்வேறு வடிவங்களில் தோன்றி மறைந்திருக்கிறது. சாதாரண மனிதர்கள் அவர்களின் வீரத்தால் அசாதாரண வீரர்களாக இருந்திருப்பது புதிதல்ல. காந்தியைப் பார்த்திருக்கிறோம். நேருவைப் பார்த்திருக்கிறோம் .ராஜாஜி எவ்வளவு தைரியசாலி என்று தெரியும். அம்பேத்கார் பற்றியும் தெரியும். இப்படி சாமான்யர்கள் தங்கள் வீரத்தால் எவ்வளவு உயரம் சென்றவர்கள் என்பதை ஒவ்வொரு காலத்திலும் , ஒவ்வொரு படியிலும் பார்த்திருக்கிறோம். இவர்களால் தான் இந்தியச் சக்கரம் சுழல்வதாக நம்புகிறேன்.

மகாத்மா காந்தி மாதிரி ஆள் கிடைக்கும் என்று பாராளுமன்ற கிணற்றுக்குள் தேடினால் கிடைக்க மாட்டார்கள். மகாத்மா மாதிரியானவரை பாத சாரிகளுக்குள் தேடினால் கிடைப்பார்கள். அப்படித் தேடாமல் கிடைத்தவர் தான் டிராஃபிக் ராமசாமி. இவரை ஊடகங்கள் வெவ்வேறு விதமாய் சித்தரித்ததுண்டு. இவரை ஒரு எக்ஸென்ட்ரிக் என்பதைப் போல சித்தரித்ததுண்டு. ஆனால் டிராஃபிக் ராமசாமி . எல்லாருடைய மனதிலும் மனசாட்சியாக உறுத்திக் கொண்டிருக்கிறார் . அப்படி ஒரு தைரியத்தைச் செயல்படுத்திய வீரர் இவர். அப்படிப் பட்டவரை இருக்கும் போதே படமாக்கும் முயற்சி , அதுவும் அவரே பார்த்துப் பாராட்டி ரசிக்கும் படி படமாக எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. படக் குழுவுக்கு இதுவே முதல் வெற்றி . அடுத்து வணிக வெற்றியும் வந்து சேரும்.

எஸ்.ஏ.சி. அரசியல் வாடையில் படம் எடுப்பவரல்ல. முழு அரசியல் படமாக இறங்கி எடுப்பவர். அதுவும் அந்தக் காலத்திலேயே அவ்வளவு துணிச்சலாக அரசியல் படங்கள் எடுத்தவர். அவர் ஆரம்பித்து வைத்த அந்த மாதிரியான பாணி இன்றும் தொடர்கிறது .

அவரே ஒரு இயக்குநராக இருந்தும் விக்கி என்கிற இன்னொரு இளம் இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து அவருக்கும் ஒரு தொடக்கம் அமைத்து இருப்பது பாராட்டுக்குரியது.

நடந்து முடிந்த கதையை படமாக்கும் போது சிலவற்றை வளைக்கலாம். ஆனால் நடந்து கொண்டிருக்கும் கதையைப் படமாக எடுப்பது சிக்கலானது. நடந்த ஒரு கதையை `ஹேராம்` படமாக நான் எடுத்த போது எவ்வளவு சிக்கல்கள் வந்தன என்பதை நான் அனுபவித்திருக்கிறேன் .