Wednesday, October 28
Shadow

நடிகவேல் நடிகர் எம். ஆர். ராதா மறைந்த தினம் இன்று

தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகருமாவார்.

எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 இல் சென்னையில் பிறந்தார். மதராஸ் ராசகோபால் அவர்களின் மகன் ராதாகிருட்டிணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. ராணுவவீரராகப் பணிபுரிந்த ராதாவின் தந்தை உருசிய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார். இவருக்கு ஜே.ஆர்.நாயுடு என்னும் ஜானகிராமன் என்ற அண்ணனும் பாப்பா என்னும் தம்பியும் இருந்தனர்.

சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார். பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல கம்பெனிகளில் பணியாற்றினார்.

ராதா நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் அவரை வைத்து ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி என்னும் படத்தை 1937-ல் தயாரித்து வெளியிட்டார். அதன்பிறகு 1942 வரை சந்தனத்தேவன், பம்பாய் மெயில், சத்தியவாணி, சோகாமேளர் ஆகிய படங்களில் நடித்த ராதா அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார்.

பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1954ல் திருவாரூர் கே.தங்கராசு என்பவர் எழுதிய ரத்தக்கண்ணீர் என்ற வெற்றி நாடகத்தை திரை வெளியீடாக ரத்தக்கண்ணீர் என்ற படத்தின் மூலம் திரைப்படத்துறைக்குத் திரும்பினார். கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த ராதா அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஏற்று நடிக்கத்தொடங்கினார். 125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். ராதாவின் நாடகங்களில் புகழ்பெற்றது ‘இழந்தகாதல்’ என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்புப் பலராலும் பாராட்டப்பட்டது.

எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கிற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார்.

துவக்கத்தில் ஈ.வெ.இராமசாமியுடன் தொழில் அடிப்படையில் சில மோதல்கள் ஏற்பட்டாலும்,[8] பின்னாளில் அவரது கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளராக இருந்தார்.[9] காமராஜரின் தனிப்பட்ட நண்பராகவும் இருந்த இவர் ஈ.வெ.இராமசாமி காங்கிரசை ஆதரித்தபோது காமராஜருக்காக தேர்தலில் வாக்குசேகரித்தார். இவரது அரசியல் சாய்வினாலும் தொழிலும் எம். ஜி. ஆருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.

தனது சீர்திருத்தக் கருத்துக்களையும், பிராமணர் எதிர்ப்பு கருத்துக்களையும், திராவிட இயக்கக் கருத்துக்களையும் இவர் தனது நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வெகுவாகப் பரப்பினார். இருந்தும் இவரது எதிர்ப்பாளர்களும்கூட இவரது நடிப்பை ரசித்தனர்

இவர் நடித்த திரைப்படங்கள்

ராசசேகரன், சந்தனத்தேவன், பம்பாய் மெயில், சத்தியவாணி, சோகாமேளர், ரத்தக்கண்ணீர், ஆயிரம் ரூபாய், கை கொடுத்த தெய்வம், பாவ மன்னிப்பு, சித்தி, புதிய பறவை, பலே பாண்டியா, பெற்றால்தான் பிள்ளையா, தாய்க்குப்பின் தாரம், குமுதம், கற்பகம், தாயை காத்த தனயன், பாகப்பிரிவினை, பணம் பந்தியிலே, நல்லவன் வாழ்வான்

இவர் எழுதிய நாடகங்கள்

ரத்தக்கண்ணீர், கீமாயணம், லட்சுமிகாந்தன், தூக்குமேடை