
விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
‘சிவாஜி’ கணேசன், சின்னையா மன்றாயர் – ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், இராம்குமார் பிரபு மற்றும்; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.
சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
‘சிவாஜி’ கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் “பாசமலர்”, ” பாவ மன்னிப்பு”, “பார்த்தால் பசி தீரும்”, ” வீரபாண்டியக் கட்டபொம்மன்” போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். மேலும் சிவாஜியுடன் மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார்.
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.
