Saturday, November 7
Shadow

பின்னணிப் பாடகி பி. சுசீலா பிறந்த தின பதிவு

பி. சுசீலா அல்லது புலப்பாக்க சுசீலா இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாண்டுகளாக 25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

சுசீலா ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் புலப்பாக்க முந்தராவ், சிறீசம்மா ஆகியோருக்கு பிறந்தார். சுசீலாவுக்கு 5 சகோதரிகளும் 3 சகோதரர்களும் உள்ளனர். இவரது தந்தை ஒரு வக்கீல்லாக இருந்தார். அங்குள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர்.

சுசீலா 1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத்தொடங்கினார். சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ் தனது பெற்றதாய் படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார். 1953 ஆம் ஆண்டில் இப்படத்தில் ஏ. எம். ராஜாவுடன் இணைந்து பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையமைப்பில் எதுக்கு அழைத்தாய் என்ற பாடலைப் பாடினார். 1955 இல் வெளிவந்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம்பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும், உன்னைக் கண் தேடுதே என்ற பாடல்கள் சுசீலாவுக்குப் பெயரை வாங்கிக் கொடுத்தன. சுதர்சனம் இசையமைத்த “டொக்டர்” என்ற சிங்களப் படத்திலும் பாடியுள்ளார்.

பல பாடல்களுக்கு ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். 1969 ஆம் ஆண்டில் அகில இந்தியப் பாடகிக்கான பரிசைப் பெற்றுக் கொண்டார். இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் என்ற திரைப்படத்தில் பொட்டு வைத்த என்ற பாடலைப் பாடினார்.

1957 ஆம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.