
தற்போதைய மார்கெட்டை பொறுத்தவரை இந்திய படங்களை வெளிநாடுகளிலும் திரையிடுவதில் தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ரஜினி படங்கள் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூரில் அதிக வரவேற்பை பெறுகின்றன. ராஜமவுலி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகிய ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்கள் உலக அளவில் பெரும் வசூலை குவித்தன. இந்தியில் உருவான ‘டங்கல்’ படம் சீனாவில் அசைக்க முடியாத சாதனையை படைத்துள்ளது. அதேபோல் அமீர்கானின் ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்ஸ்’, சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பைஜான்’ படங்கள் சீனாவில் திரையிடப்பட்டன. இந்த படங்களுக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், தெலுங்கில் சிரஞ்சீவி – நயன்தாரா நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தையும் சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கியிக்கிறது. இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், முக்கிய வேடத்தில் நடிப்பதால், இந்த படத்துக்கு சீனாவில், ஏற்கனவே வெற்றிகரமாக ஓடிய இந்தி படங்களைப்போல இதற்கும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதில் விஜய்சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.