
தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் – விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.
பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் முடித்து ஐந்து மாதங்களில் தனது 29-வது அகவையில் 1959 அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார். இவர் இறக்கும் போது இவருக்கு 5 மாதத்தில் குழந்தை இருந்தது. இவரது மறைவுக்கு கலைஞர் மு. கருணாநிதி தனது அஞ்சலியில் “கண்களை மூடுகிறேன்; கல்யாணம் தெரிகிறார் — ஒளி தெரிகிறது! கண்களைத் திறக்கிறேன்: கல்யாணம் இல்லை – கலையுலகு இருட்டாயிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைத்துள்ளது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
