Friday, January 17
Shadow

குறள் வழியாக எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்த பிரசன்னா

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் திரிபுராவின் தெற்கு மாவட்டத்தில், பெலோனியா நகரில் வைக்கப்பட்டு இருந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலைகளை பாஜகவினர் மண் அள்ளும் எந்திரம் கொண்டு அகற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதல்களுக்கும், லெனின் சிலை அகற்றப்பட்டதற்கும் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் நாளை பெரியார் சிலை அகற்றப்படும்’ என்று முகநூலில் பதிவிட்டார். இவரின் சர்ச்சை கருத்தை தமிழக தலைவர்கள் பலர் கண்டித்தனர்.

ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் நடிகர் பிரசன்னாவும் எதிராக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்.

குறள் விளக்கம்

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்’ என்று பதிவு செய்திருக்கிறார்.