
தென்னிந்திய ஆன்மிக குரு. இவரது அடியார்களினால் இவர் “இறை அவதாரம்” எனப் போற்றப்படுகிறார். இவர் ஒரு மதப் பரப்புனரும் சித்தரும் ஆவார்[3][4][5]. விபூதி தருவித்தல், மேலும் மோதிரங்கள், சங்கிலிகள், கடிகாரங்கள் போன்ற சிறிய பொருட்களை தருவித்தல் போன்ற இவரது செய்கைகளினால் இவர் மீது உலக நாடுகளில் பலத்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இவை எளிய வித்தைகளே என பகுத்தறிவாளர்கள் நிரூபித்து உள்ளார்கள். ஆனாலும் இவற்றை இவரது பக்தர்கள் இறைவனின் அற்புதம் என கருதுகின்றனர்[7]. சத்திய சாயிபாபா தனது 14வது அகவையில் சீரடி சாயி பாபாவின் மறு அவதாரம் எனத் தன்னை அறிவித்துக் கொண்டார்.
சத்திய சாயிபாபா நிறுவனம் தனது சாயி அமைப்புகள் மூலம் இலவச மருத்துவ நிலையங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், கிராமங்களுக்கு குடிநீர்த் திட்டம் போன்ற பல சமூகநலத் திட்டங்களை இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. இவரது ஏறத்தாழ 1200 சத்ய சாய் அமைப்புகள் 114 மையங்களில் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது[9][10]. இவரின் வழிநடப்பவர்கள் சுமார் 60 இலட்சம் பேர் (1999 இல்) எனக் கணக்கிடப்பட்டுள்ளது உலகெங்கிலும் 100 கோடி அடியார்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி எனும் கிராமத்தில் பிறந்தார். அவர் தாயாரின் பெயர் ஈசுவரம்மா, தந்தை பெத்தவெங்கம ராயூ ரட்னாகரம். சத்திய சாயி இவர்களுக்கு 8-ஆவது குழந்தையாகப் பிறந்தார். ”சத்திய நாராயண விரதம்” இருந்து பிறந்ததால், இவருக்குச் சத்திய நாராயணன் எனப் பெயர் சூட்டினர்.
அருள்மிகு சத்திய சாயிபாபா மற்றும் அவரது பக்தர்கள் நூற்றுக்கணக்கான சமூகச்சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்[சான்று தேவை]. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூகச் சேவை நிறுவனங்கள் எனப் பல வழிகளில் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலும் இவை இயங்குகின்றன. விழுமியச் சமூகம் (Sociocare), விழுமியக் கல்வி (Educare), விழுமிய மருத்துவம் (Medicare), விழுமியக் குடிநீர் (aquacare) எனப் பல துறைகளில் அவரின் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவரது நிறுவனம், உலகம் முழுவதும் 136 நாடுகளில் மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது.
விழுமியச் சமூக (Sociocare) நிறுவனம் உலகின் பல இடங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ஒரிசாவில் நடந்த வெள்ளத்தில் வீடுகள் இழந்தவர்களுக்குப் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.[12].
விழுக் கல்விப் பாடத்திட்டத்தின் மூலம், சாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் பல கல்வி அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இவை அனைத்தும் மாணவர்களிடம் இருந்து எந்த விதமான கட்டணங்களும் பெறுவதில்லை.
விழுமிய மருத்துவத்தினைத் தொண்டுப்பணியாக அருள்மிகு சத்தியசாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன் பெறும் வகையில் பல இலவச மருத்துவ முகாம்களையும், பல இலவச மருத்துவமனைகளையும் நடத்திவருகின்றது..புட்டபர்த்தியிலும் பெங்களூருவிலும் உயர்சிறப்பு மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன.
தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆந்திரவில் உள்ள அனந்தபூர் மற்றும் வடக்கு,கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரைச் ”அருள்மிகு சத்திய சாயி மைய அறக்கட்டளை” வழங்கி உள்ளது. அனந்தபூர் மாவட்ட குடிநீர்ப் பிரச்னை சுதந்திர காலத்த்திற்கு முற்பட்டது, எந்த அரசாலும் தீர்த்துவைக்க முடியாமல் இருந்தது. இதனை அருள்மிகு சத்திய சாயிபாபா அவர்கள், குறுகியகாலச் சாதனையாக அதாவது ஒரே வருடத்தில் எழுநூறு கிராமத்திற்கு நல்ல குடிநீர் கிடைக்கும்படியாக விரைவில் செய்து முடித்தார். உண்மையாகச் சொல்லப்போனால் இதுதான் அவரின் அதிசயம்மிக்க அற்புதம் எனலாம்.
சென்னை மக்களின் தாகத்தைத் தீர்க்கத் தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளால் முயற்சி செய்யப்பட்ட, தோல்வியடைந்த தெலுங்கு கங்கைத் திட்டத்தினைச் சீர்செய்து சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கியது, அருள்மிகு சத்திய சாயி மைய அறக்கட்டளை.[22][23]
