
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘ரெமோ’ படத்தின் டிரைலர் நேற்று மாலை 6 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது.
ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரது படங்களின் டிரைலர்களை வெளியிட்டால் மட்டுமே இப்படி 12 மணி நேரத்திற்குள்ளாக 10 லட்சம் பார்வைகளைப் பெறுவது வழக்கம். இப்போது அந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் சேர்ந்திருக்கிறார்.
விக்ரம், சூர்யா ஆகியோர் அந்த வரிசையில் இல்லையா என சிலர் கேட்கலாம். இவர்களது படங்களைப் பொறுத்தவரை இயக்குனர்கள், படங்களைப் பொறுத்தே அவர்களது டிரைலர்களின் பார்வை இருக்கும்.
சிவகார்த்திகேயனுக்குக் கிடைக்கும் ஆதரவையும், வரவேற்பையும் ஏற்றுக் கொள்ள முடியாத சில முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் கடந்த சில நாட்களுக்கு எதிராக சிவகார்த்திகேயனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சதி வேலைகளைச் செய்து வருகிறார்கள்.
தமிழ்த் திரையுலகத்தில் போட்டி என்றால் அது விஜய், அஜித் ரசிகர்களுக்கிடையே மட்டும்தான் இருக்க வேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
அதனால்தான் ‘கபாலி’ படத்தின் டீசரும், பாடல்களும் யு டியூபில் சாதனை மேல் சாதனை செய்த போது கூட அதற்கு எதிராக கமெண்ட்டுகளைப் பரப்பிவிட்டார்கள். படம் வெளிவந்த போதும் எதிர்மறையான விமர்சனங்களை வேண்டுமென்றே பரப்பினார்கள்.
இப்போது திரையுலகத்தில் பலரது பார்வையும், பரபரப்பும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ பக்கம் திரும்பியுள்ளது. நேற்று டிரைலர் வெளியாக அதுவும் குறைந்த நேரத்தில் சாதனை புரிந்துள்ளதால் மற்ற நடிகர்களது ரசிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
யு டியுப் என்ற ஒன்றை இன்றைய இளம் தலைமுறையினரிடம் அதிகமாகக் கொண்டு சேர்த்ததில் சிவகார்த்திகேயனுக்கு பெரும் பங்கு உண்டு. அவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே அவருடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை யு டியுபில் பல கோடி பேரைப் பார்க்க வைத்தவர்.
பொதுவான ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் திறமையையும், வளர்சியையும் பார்த்து அவருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த வெற்றியெல்லாம் அவருடைய திறமைக்கும், உழைப்புக்கும் கிடைக்கும் வெற்றி என்று சிவகார்த்திகேயனின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.