Thursday, February 2
Shadow

‘மக்கள் செல்வன்’ பட்டம் அல்ல: விஜய் சேதுபதி விளக்கம்

விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், சதீஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘றெக்க’. இமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை கணேஷ் தயாரித்திருக்கிறார். அக்டோபர் 7ம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது சிவபாலன் பிக்சர்ஸ்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி பேசியது, “இந்த ஆண்டு ‘றெக்க’ எனக்கு ஆறாவது படம். இரண்டு வாரத்துக்கு ஒரு படம் என நிறைய மீம்ஸ்கள் வருகிறது. அதை பார்க்க காமெடியாகவும், ஜாலியாகவும் இருக்கிறது. எனக்கு ஒரு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து முடிக்க 3 மாதங்கள் ஆகிறது. இதற்கு நான் காரணமல்ல.

‘றெக்க’ படம் பண்ணும் போது செம ஜாலியாக இருந்தது. மற்ற நாயகர்கள் அடித்து பறக்கவிடும் போது ரொம்ப ஆசையாக இருக்கும். அந்த ஆசையை இந்தப் படத்தில் நிறைவேற்றி இருக்கிறேன். இப்படத்தை ஒரு பேண்டஸியின் எதார்த்தமாகத் தான் பார்க்கிறேன். நான் அடித்து ஒருவர் பறக்கிறார் என்றால் எப்படியிருக்கும். உண்மையில் என்னை யாராவது அடித்தால் ஓடிவிடுவேன்.

இப்படத்தை நான் பண்ணுவதற்கு முக்கிய காரணம் ரத்தின சிவா மற்றும் அவருடைய ‘வா டீல்’ படத்தின் ட்ரெய்லர் தான். நானும் அப்படத்துக்காக காத்திருக்கிறேன். இதுமட்டும் தான் நமக்கு வரும் என்று ஒரு கட்டம் போட்டு என்னை சுறுக்கிக் கொள்ள விரும்பவில்லை. படம் தவறாக இருந்தால் கண்டிப்பாக திட்டுவார்கள். அதற்கு பயந்து புதிய விஷயங்களை பண்ணமால் இருப்பது தவறு என தோன்றுகிறது.

‘றெக்க’ படத்தில் நடிப்பது கஷ்டமாக இருந்தது. நான் ஒருவரை அடித்து அவர் பறப்பது போன்று முகபாவனை கொடுக்க வேண்டும். அதனை மக்கள் நம்புவது போன்று பண்ண வேண்டும் என்ற கஷ்டம் இருந்தது. ஒரு காட்சியைப் படித்து அதனை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை உள்வாங்கி நடிக்கிறார் லட்சுமி மேனன். இவ்வளவு சிறுவயதில் சினிமாவைப் பற்றி புரிந்துக் கொண்டு நடிப்பது பெரிய விஷயம்.

‘தர்மதுரை’ படத்தில் தான் என் பெயருக்கு முன்பு ‘மக்கள் செல்வன்’ என்று போட்டார்கள். அதனை பட்டமாக நினைக்கவில்லை. ஒரு இயக்குநர் அவருடைய மாணவனுக்கு வைத்த அன்பு பெயராக எடுத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அதனை எடுக்க மாட்டேன். அவர் என் மீது அன்பு வைத்திருக்கிறார், நான் அவர் மீது மரியாதை வைத்திருக்கிறேன்.

‘றெக்க’ மாதிரியான படங்கள் தொடர்ச்சியாக பண்ண மாட்டேன். ஒரே மாதிரியான படங்கள் தொடர்ச்சியாக பண்ணினால் எனக்கே போரடித்துவிடும். அடுத்து அடுத்து பண்ணும் 5 படங்கள் எதுவுமே ‘றெக்க’ சாயல் கிடையாது. விஜய் சேதுபதி இப்படித் தான் என்று யாருமே எண்ணிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

சினிமாவை என் வாழ்க்கையில் ஒரு அனுபவமாக பார்க்கிறேன். என் வாழ்க்கையில் அசை போடுவதற்கு சினிமா அனுபவம் நிறைய தேவை. தோல்விகளைப் பார்த்து பயமில்லை. வேகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. இப்போது சம்பாதிப்பதே போதுமானதாக இருக்கிறது.

‘ரெமோ’ உடன் ‘றெக்க’ வெளியாகிறது. ‘ரெமோ’ நல்ல படம் தான், நல்லபடியாக ஓடட்டும். அந்தப் படத்தில் சிவா தன்னை தானே கலாய்த்துக் கொள்கிறார். அது ஒரு நல்ல ஐடியா. இரண்டு படங்களையும் ஒப்பிட வேண்டாம். 10 நாட்கள் விடுமுறை வருகிறது. அதற்கு ஒரு படம் போததாது. அதனால் ‘றெக்க’வும் பாருங்கள், நன்றாக தான் இருக்கும்.

இப்படத்தில் திரையரங்கில் ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்றார்கள். யாருடைய பேனர் வைக்கலாம் என எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என கூறினார். இவர்கள் அனைவரையும் வைத்து கொண்டாடி விட்டார்கள். என்னோடு சமகாலத்தில் இருக்கும் ஒரு நடிகர் சிவகார்த்திகேயன் அவரை நான் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது. ‘மான் கராத்தே’ போஸ்டர் வைக்கச் சொன்னது நான் தான். அப்படத்தில் வரும் செய்கையில் முடிக்கலாம் என்று முடித்ததும் நான் தான்” என்று தெரிவித்தார்.

Leave a Reply