
கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ என இரண்டு படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இரண்டிலுமே ஒருசில காட்சிகள்தான் படமாக்கப்பட வேண்டும். என்ன காரணத்தினாலோ அவை படமாக்கப்படாமல் நீண்ட நாட்களாகக் காத்திருப்பில் உள்ளன.
இதற்கிடையில், தன்னுடைய ‘ஒன்றாக ஒரிஜினல்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தனிப் பாடல்களையும் இயக்கி வருகிறார் கவுதம் மேனன். பின்னணிப் பாடகரான கார்த்திக் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல் எழுத, கவுதம் மேனன் இயக்கத்தில் தனிப் பாடல்கள் உருவாகி வருகின்றன. இதுவரை இரண்டு பாடல்கள் இந்தக் கூட்டணி மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

முதலில் வெளியான ‘கூவை’ பாடலை, சின்னப்பொண்ணு பாடியிருப்பதோடு, அவரே அந்தப் பாடலிலும் நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடன இயக்குநர் சதீஷ் மற்றும் குழுவினர் நடனமாடியுள்ளனர். இரண்டாவது வெளியான ‘உலவிரவு’ பாடலை கார்த்திக் பாடியுள்ளார். டொவினோ தாமஸ், டிடி இருவரும் இந்தப் பாடலில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், மூன்றாவதாக ‘போதை கோதை’ என்ற பாடலை வெளியிட இருப்பதாகத் தெரிவித்துள்ளார் கவுதம் மேனன். இந்தப் பாடலில் அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடித்துள்ளனர். விரைவில் இந்தப் பாடல் வெளியாக இருக்கிறது.
