
ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடித்த படம் ‘இம்சை அரசன் 23ம் புலிக்கேசி’ சிம்புதேவன் இயக்கியிருந்தார். இப்படத்தின் 2ம் பாகமாக உருவாகிறது ‘இம்சை அரசன் 24ம் புலிக்கேசி’. இதிலும் மன்னர்வேடம் ஏற்று நடிக்க வடிவேலு ஒப்புக்கொண்டிருந்தார். சில நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென்று தயாரிப்பு நிறுவனத்துக்கும் வடிவேலுக்கும் பிரச்னை எழுந்தது. இதையடுத்து படப்பிடிப்பில் பங்கேற்க மறுத்துவிட்டார் வடிவேலு.
இதுபற்றி தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தது. வடிவேலு முறைப்படி படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தராததால் சுமார் ரூ. 7 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதனை அவரிடமிருந்து சங்கம் திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டது. இதன் மீது இருதரப்பிலும் கருத்து கேட்டு பிரச்னைக்கு முடிவு காண முயன்றனர்.
ஆனால் சமரசம் ஏற்படவில்லை. பிரச்னை தீராமல் நீடித்து வந்தது. தற்போது வடிவேலு படப் பிடிப்பில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இதையடுத்து பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தயாரிப்பு நிறுவனம் கூறும்போது, ‘பிரச்னை பேசி முடிக்க வேண்டி உள்ளது’ என்று தெரிவிக்கின்றனர். கூடியவிரைவில் பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்கப்படும் என்று சங்க தரப்பினர் தெரிவிக்கின்றனர்
