Friday, May 1
Shadow

ஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ ஜூலை 27-ம் தேதி ரிலீஸ்!

ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கடம்பன்’. ராகவன் இயக்கிய இந்தப் படம், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸானது. இந்தப் படம் ரிலீஸாகி ஒரு வருடத்துக்கு மேலாகியும் அதன்பிறகு ஆர்யா நடிப்பில் எந்தப் படமும் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில், ஆர்யா நடித்துள்ள ‘கஜினிகாந்த்’ படம் வருகிற 27-ம் தேதி ரிலீஸ் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஆர்யா ஜோடியாக ‘வனமகன்’ சயீஷா நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் முகுல் தேவ் வில்லனாக நடித்துள்ள இந்தப் படத்தில், கருணாகரன், சதீஷ், காளி வெங்கட், ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன், உமா பத்மநாபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பாலு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தைப் பார்த்த மத்திய தணிக்கை வாரிய உறுப்பினர்கள் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இந்தப் படத்துக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆர்யா. அதைத் தொடர்ந்து சுந்தர்.சி. இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ என்ற பிரமாண்டமான வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார்.

அமீர் இயக்கத்தில் ஆர்யா, அவருடைய தம்பி சத்யா நடித்துவந்த ‘சந்தனத்தேவன்’, பைனான்ஸ் பிரச்சினையால் பாதியிலேயே நிற்கிறது.