
ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட மொழி சினிமாவின் தரம் எப்படி இருந்தது என்பதை அந்த மொழியில் வெளிவந்த சில குறிப்பிட்ட சினிமாக்கள் தீர்மாணிக்கிறது என்று சொல்லலாம்.
அந்த வகையில், வழக்கமான கல்லா கட்டும் நோக்கில் எடுக்கப்படும் கமர்ஷியல் திரைப்படங்களுக்கு மத்தியில், கலையின் தாகத்தை, கலை மீதுள்ள மோகத்தை சற்றே கூட்டும் விதமாக ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காணக்கிடைத்திருக்கிறது. அதுதான், இயக்குனர் ராதாமோகனின் அறுபது வயது மாநிறம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, விக்ரம்பிரபு என வித்தியாசமான கூட்டணியில் வெளிவந்திருக்கிறது. காஞ்சிவரம் திரைப்பட இறுதிக்காட்சிகளில் அழக்கூடிய பிரகாஷ்ராஜ் லேசாக ஞாபகம் வருகிறார்.
ஆனால் மாறுபட்ட இந்தக் கூட்டணி தமிழ் சினிமாவிற்கு புதிதாக ஏதோ சொல்ல வருவது புரிகிறது. காந்தியின் மூக்குக்கண்ணாடியை வளைத்து 60 வயது மாநிறம் எனக் டைட்டில் போட்டுள்ளனர். ராதாமோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படம் முடிந்த பிறகுதான் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியிடவேண்டுமென முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் இந்துஜா, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள்ஜோதி, பரத் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விவேக் ஆனந்த ஒளிப்பதிவு செய்துள்ளார்.
