
விஜய் நடிப்பில் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
‘சர்கார்’ படம், தான் எழுதிய ‘செங்கோல்’ கதையைத் திருடி எடுக்கப்பட்டுள்ளது என இணை இயக்குநரான வருண் ராஜேந்திரன் புகார் அளித்தார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவரான கே.பாக்யராஜும், ‘செங்கோல்’ கதையில் இருந்து 95 சதவீதத்தைத் திருடி ‘சர்கார்’ படம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 30) விசாரணைக்கு வந்தது. வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்துகொள்ள ஏ.ஆர்.முருகதாஸ் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததால், பிரச்சினை சுமுகமாக முடிந்தது.
அதன்படி, டைட்டிலில் வருண் ராஜேந்திரன் பெயர் இடம் பெறுவதோடு, 30 லட்ச ரூபாய் இழப்பீடும் தருவதற்கு ஒப்புக் கொண்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய வருண் ராஜேந்திரன், “தடை கேட்டு நான் நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை, அங்கீகாரம் கேட்டுதான் வந்தேன். 2004-ல் விஜய்க்காக பண்ணப்பட்ட கதை இது. அதை என் இயக்குநரிடம் (எஸ்.ஏ.சந்திரசேகர்) சொல்லி முயற்சி செய்து கொண்டிருக்கும்போது, சில சூழ்நிலைகளால் அந்தப் படத்தை எடுக்க முடியவில்லை.
ஆனால், இந்தப் போராட்டத்துக்குக் காரணமே எஸ்.ஏ.சி. சார் தான். அவர்தான் எனக்குத் தூண்டுதல். அவர் ஒரு போராளி. எனக்குள் போராட்டத்தனத்தை விதைத்தவரும் அவர்தான். நீதிமன்றத்தில் இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. நான் எஸ்.ஏ.சி. சாரை சந்திக்க இருக்கிறேன்.
விஜய்க்கும், அவருடைய ரசிகர்களுக்கும், எஸ்.ஏ.சி. குடும்பத்தாருக்கும் ‘சர்கார்’ அமைக்க என்னுடைய செங்கோலைப் பரிசாக அளிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
