
ஏ. எல். சீனிவாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுள் ஒருவர். கவிஞர் கண்ணதாசனின் மூத்த சகோதரரான இவர் ஏ.எல்.எஸ். தயாரிப்பகம் என்ற பெயரில் திரைப்படங்களைத் தயாரித்து வந்தார்.
ஏ.எல்.சீனிவாசன் அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் (இன்றைய சிவகங்கை மாவட்டம்) சிறுகூடல்பட்டியில் 1923 நவம்பர் 23-ந்தேதி பிறந்தார். இவரது பெற்றோர் சாத்தப்பன் செட்டியார் விசாலாட்சி ஆவர். இந்தத் தம்பதிகளுக்கு மொத்தம் 9 பிள்ளைகள். அவர்களில் 6-வதாகப் பிறந்தவர் ஏ.எல்.எஸ். இவருடைய தம்பி கவிஞர் கண்ணதாசன். சிறுகூடல்பட்டியில் உள்ள கலைமகள் வித்யாசாலையில் எட்டாம் வகுப்பு வரை ஏ.எல்.எஸ். படித்தார். சிறுவயதிலேயே, சினிமா மீது ஏ.எல்.எஸ்.சுக்கு மிகுந்த ஆர்வம். காரைக்குடியில் உள்ள சினிமா தியேட்டருக்கு (8 மைல் தூரம்) சைக்கிளில் சென்று, தொடர்ந்து மூன்று காட்சிகளையும் பார்த்து விட்டுத் திரும்புவார்.
1941-ல் சென்னையில் ஒரு கம்பெனியில் 40 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். சில மாதங்களே அங்கு வேலை பார்த்தார். பின்னர் கோவை சென்று, சினிமா விநியோகஸ்தரின் பிரதி நிதியாக பணியாற்றினார். அப்போது டி.ஆர்.மகாலிங்கம், என். எஸ்.கிருஷ்ணன் ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. 1942-ல் வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த திருமலைச்சாமி கவுண்டர், முத்துமாணிக்கம், துரைசாமி கவுண்டர் ஆகியோருடன் சேர்ந்து ‘கோயமுத்தூர் பிக்சர்ஸ்’ என்ற படக்கம்பெனியைத் தொடங்கினார்.
சினிமா படங்களை வாங்கி விநியோகம் செய்யும் கம்பெனி இது. அறிஞர் அண்ணா கதை- வசனம் எழுதிய ‘வேலைக்காரி’ படத்தின் விநியோக உரிமையை ஏ.எல்.எஸ். வாங்கினார். படம் மிக வெற்றிகரமாக ஓடவே, நல்ல லாபம் கிடைத்தது. 1951-ல் சென்னையில் ‘மதராஸ் பிக்சர்ஸ்’ என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். முதல் படம் ‘பணம்.’ இதை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ட் செய்தார். ‘மதராஸ் பிக்சர்ஸ்’ என்ற பெயர் பின்னர் ‘ஏ.எல்.எஸ். புரொடக்சன்ஸ்’ என்று மாறியது.
இவர் தயாரித்த திரைப்படங்கள்
ஆனந்தி, சினிமா பைத்தியம், நியாயம் கேட்கிறோம், பணம், கன்னியின் சபதம், சங்கிலித்தேவன், செந்தாமரை, சாந்தி, அம்பிகாபதி, திருடாதே, சாரதா, மணியோசை, சாந்தி
