
பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் நடித்தார் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். தெலுங்கில் வெளியான அர்ஜூன்ரெட்டி படத்தின் ரீமேக்கில் இப்படம் உருவானது. படம் மொத்தமாக முடிந்த நிலையில் பாலா இயக்கிய படம் தங்களுக்கு திருப்தியாக இல்லை என்று அந்த படத்தை தயாரித்த, இ4 என்டர்டெயின்ட்மென்ட் மொத்த படத்தையும் தூக்கி போட்டது.
அதையடுத்து, ஆதித்ய வர்மா என்ற பெயரில் அர்ஜூன் ரெட்டியை மீண்டும் தமிழில் ரீமேக் செய்து வருகிறது அந்நிறுவனம். துருவ் விக்ரமே நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஆதித்ய வர்மாவும் டிராப் செய்யப்பட்டிருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவின.
இந்த நிலையில் அந்த செய்தியை மறுத்துள்ள பட தயாரிப்பாளர் முகேஷ் ஆர்.மேத்தா, டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஆதித்ய வர்மா படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். ஏப்ரல் 9-ந்தேதியான இன்று போர்ச்சுக்கல் நாட்டில் ஆதித்ய வர்மா படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்படுகிறது என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
