Sunday, June 21
Shadow

இயக்குநர் மிருணாள் சென் பிறந்த தின பதிவு

மிருணாள் சென் என்பவர் கல்கத்தாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர். இந்திய திரைப்படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்திய திரைப்பட இயக்குநர்களில் ஒருவர். இவர் இந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்கம் ஆகிய 4 மொழிகளில் ஏறக்குறைய 34 திரைப்படங்கள், 14 குறும்படங்கள் 4 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். இவரைப் பற்றியும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
மிருணாள் சென் தற்போதைய வங்காள தேசத்தில் உள்ள ஃபரீத்பூரில் ஒரு இந்து குடும்பத்தில் 1923இல் பிறந்தார். பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்தபின் கல்லூரி படிப்புக்காக கல்கத்தா வந்தார். கல்கத்தா ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் இயற்பியலும், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பயின்றார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சியின் சார்பான கலைப் பண்பாட்டு பிரிவில் ஈடுபாட்டுடன் இருந்தார் என்றாலும் கட்சியில் உறுப்பினராகவில்லை.
கொல்கத்தாவில் படிக்க வந்தபோது ரூடால்ஃப் ஆர்ன்ஹைம் எழுதிய ‘ஃபிலிம் அஸ் ஆர்ட்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தார். இதனால் இவருக்கு திரைப்படங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. திரைப்பட விமர்சனங்கள் எழுதிவந்தார். இவர் படித்து முடித்து சிலகாலம் மருந்துப் பொருள் விற்பனைப் பிரதிநிதியாக வேலையில் இருந்தார். பின் கல்கத்தா திரைப்பட ஸ்டுடியோவில் ஆடியோ தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றினார். 1950 முதல் முழுநேர திரைப்படப் பணிகளில் இறங்கினார்.
இவர் முதன் முதலில் 1955இல் ‘ராத் போர்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் வெற்றி அடையவில்லை. இரண்டாவதாக ‘நீர் ஆகாஷெர் நீச்சே’ (நீல வாணத்திற்கு கீழே) என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் இவருக்கு இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது. மூன்றாவதாக ‘பைஷே சிரவன்’ (இரவீந்திர நாத் தாகூர் இறந்த அன்று) என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததோடு, இவருக்கு உலக அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
இதன் பிறகு சென் ஐந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கினார். இவரின் திரைப்படங்கள் நடுத்தர வகுப்பு மக்களின் குடும்பப் பிரச்சினைகளை சித்தரிக்கும் படங்களாக, குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை ஆகும். இவர் இயக்கி 1969இல் வெளிவந்த ‘புவன் ஷோம்’ (திரு. ஷோம்) என்ற திரைப்படம் இவரை உலக அளவிலும் இந்திய அளவிலும் பெரிய இயக்குநராக அடையாளப்படுத்தியது. இத்திரைப்படம் நவீன இந்திய திரைப்பட இயக்கத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.
இவரது துவக்கக்கால படங்களில் மார்க்சியத்தின் தாக்கம் வெகுவாக காணப்பட்டது. இவர் ஒரு மார்க்சிய கலைஞராக அடையாளம் காணப்பட்டார்.
இவரது பல திரைப்படங்கள் கல்கத்தா நகரை கதைக்களமாகக் கொண்டவை. இவரது படங்களில் கல்கத்தா நகரமும் ஒரு கதாபாத்திரமாகவே இருக்கும். அந்த நகர் மக்களின் அழகியலையும், மதிப்புமிக்க வாழ்கை அமைப்பையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும், நகரின் தெருக்கள் வழியாக அதன் பழமையை காண்பிப்பார்இவரின் பல திரைப்படங்கள் இந்தியாவில் விருதுகளை வென்றது மட்டுமல்லாது கேன்ஸ், பெர்லின், வெனிஸ், மாஸ்கோ, சிகாகோ, கெய்ரோ உள்ளிட்ட அனைத்து உலகத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, விருதுகளை வென்றன. இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, பத்மபூஷண் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கியுள்ளன.