

தர்மபிரபு படத்தைத் தொடர்ந்து யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்க்கா’. சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி, ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
மால் ஒன்றில் கூர்காவாக இருக்கும் யோகி பாபு, அந்த மாலில் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க தூதரை (இந்த கேரக்டரில் கனடா மாடல் எலிசா நடித்துள்ளார்) எப்படி காப்பற்றினார் என்பதே படத்தின் கதை.
கூர்க்கா யோகிபாபு, அமெரிக்க தூதரை காப்பாற்று பணியை ஒரு நாயின் உதவியுடன் செய்வார். இந்த நாய் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது.
ஹீரோ என்பதற்காக யோகிபாபுவை வித்தியாசமான கெட்டப், பந்தாவான பில்டப் என்றெல்லாம் காட்டாமல் மற்ற படங்களில் எப்படி வருகிறாரோ அப்படியே காட்டிய இயக்குநர் நடிப்பில் மட்டும் கூடுதலாய் சேட்டைகள் செய்ய வைத்திருக்கிறார். அந்த சேட்டைகள் ரசிக்கும்படியிருந்தாலும் சில காட்சிகளில் அவர் செய்யும் சூப்பர் ஹீரோ சாகசங்கள் (‘அளவுக்கு மிஞ்சினால்…’ பழமொழியை நினைவு) படுத்துகிறது.
கதையில் யோகிபாபு, அமெரிக்கப் பெண் (எலிஸா) ஒருவரை ‘லவ்’வுவதாகவும் ஒரு டிராக் வருகிறது. ஹீரோயின் என்றிருந்தால் டூயட் இல்லாமலா? இருக்கிறது. டூயட்டில் அந்த ஹீரோயின் கவர்ச்சி காட்டாமலா? காட்டுகிறார்.
யோகிபாபுவோடு சார்லி, ஆனந்த்ராஜ், மயில்சாமி, ரவிமரியா, மனோபாலா உள்ளிட்ட சீனியர்கள் காமெடிக்கு கை கொடுக்கிறார்கள்.
லிவிங்ஸ்டன், ஆடுகளம் நரேன் என தேர்ந்த நடிகர்களும் உண்டு. எல்லோருக்கும் சேர்த்து யோகிபாபுவே நடித்துவிடுகிறார். ஸ்கிரீன்பிளே அப்படி!
தலைமை வில்லனாக ராஜ்பரத். அவரது அலட்டலற்ற நடிப்பு சற்றே கவனிக்க வைக்கிறது!
‘மக்கள் மனங்களில் இந்த காலகட்டத்திலும் ஈரம் இருக்கிறது’ என்பதை சில காட்சிகளின் வழி சாட்சியாக்கியிருப்பதை பாராட்டாமல் விடமுடியாது!
சாதாரண காட்சிகளைக் கூட தன் பின்னணி இசையால் விறுவிறுப்பாக்க முயற்சித்திருக்கும் ராஜ் ஆர்யன், கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு நேர்த்தி, இன்னபிற தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்புப் பங்களிப்பு படத்துக்கு பலம் சேர்ப்பு!
படத்தின் பிளஸ் : யோகி பாபு நடிப்பு, நாயின் நடிப்பு
