Tuesday, April 28
Shadow

காப்பான் திரைவிமர்சனம் விவசாயிகளின் தோழன் Rank 3.5/5

அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யாவும் இயக்குனர் கே.வி. ஆனந்தும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் இது.

கிராமத்தில் வசிக்கும் கதிர் (சூர்யா) ஒர் ஆர்கானிக் விவசாயி. (பயப்பட வேண்டாம். கொஞ்ச நேரம்தான் அந்த பாத்திரம்). ஆனால், உண்மையில் அவர் ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். அவர் பிறகு இந்தியப் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையில் இணைகிறார். பிரதமருக்கு வரும் ஆபத்துகள், அதிலிருந்து அவரைக் காப்பாற்ற கதிர் செய்யும் சாகசங்கள்தான் மீதிப் படம்.

இதயக்கனி படத்தில் தேயிலைத் தோட்ட முதலாளியாக வந்து பாட்டெல்லாம் பாடுவார் எம்..ஜி.ஆர். பிறகு பார்த்தால் அவர் ஒரு ரகசிய போலீஸாக இருப்பார். அது யாருக்குமே தெரியாது. இந்தப் படமும் அந்த பாணியில்தான் துவங்குகிறது. ஆனால், சீக்கிரமே சுதாரித்துக்கொள்கிறார்கள்.

படத்தின் துவக்கத்தில், நாகப்பட்டினத்தில் உள்ள ராணுவ முகாமிற்குள் புகும் கதாநாயகன் அங்கிருக்கும் வீரர்களை அடித்துப்போட்டு, ஆயுதங்களையெல்லாம் வெடிக்கச் செய்கிறார். இந்தியாவில் முன்பிருந்த அரசு பக்கத்து நாட்டில் நடந்த உள்நாட்டுப் போரில், அந்நாட்டு அரசுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த பயோ – கெமிக்கல் ஆயுதங்களாம் அவை. ராணுவமே அவற்றை சத்தமில்லாமல் அகற்றினால் தெரிந்துவிடும் என்று இயற்கை விவசாயம் – ராணுவ உளவு என இயங்கிக்கொண்டிருக்கும் ஹீரோவை வைத்து, மிகப் பெரிய அளவில் வெடிக்கச்செய்து, யாருக்கும் தெரியாமல் அழிக்கிறார் பிரதமர். இதுபோல பல சாகசங்கள் படம் நெடுக.

விஜயகாந்த் காலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் புகுந்து பல அட்டகாசங்களைச் செய்துகொண்டிருந்தார். பிறகு அர்ஜுன் கொஞ்ச நாள் பயங்கரவாதிகளோடு மோதிக்கொண்டிருந்தார். இப்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யா களத்தில் இறங்கியிருக்கிறார்.

 

பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி, விவசாயி என கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா. பாதுகாப்பு அதிகாரிக்கான தோற்றம், கம்பீர நடை, துறுதுறு பார்வை என நடிப்பில் மிளிர்கிறார். படத்தின் மிரட்டலான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வாவ் சொல்ல வைக்கிறார் சூர்யா, குறிப்பாக ரெயில் ஸ்டண்ட் காட்சி வேற லெவல்.

எந்த கதாப்பாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்தும் மோகன் லால், இதில் பிரதமராக நடித்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இவர் பேசும் தமிழ் வசனங்களில் மலையாள வாசனை கலந்திருந்தாலும், அவரின் வசனங்களுக்கு திரையரங்குகளில் கைத்தட்டல் அள்ளுகிறது.

பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணாக வரும் சாயிஷா, அழகு பதுமையுடன் தோன்றி கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மோகன் லாலின் மகனாக நடித்திருக்கும் ஆர்யா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கார்ப்பரேட் முதலாளியாக நடித்திருக்கும் பொம்மன் இரானி வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். சமுத்திரக்கனி, பிரேம், பூர்ணா, தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு துறையில் நடக்கும் அரசியலை தோலுரித்து காட்டும் இயக்குனர் கே.வி.ஆனந்த். இப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களால் விவசாயத்திற்கு ஏற்படும் சிக்கல்களை திரைக்கதையில் சிறப்பாக கையாண்டுள்ளார். வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மட்டுமல்லாது, இந்தியாவைச் சேர்ந்த மிகப் பெரிய தொழிலதிபரும் பிறகு வில்லனாக மாறுகிறார். இருவரும் ஒருவருக்கொருவர் உதவுவதைப் போல செயல்படுகிறார்கள். ஆனால், ஆச்சரியப்படவைக்கும் எந்தத் திருப்பமும் இல்லாமல் ஏகப்பட்ட துப்பாக்கிச் சண்டைக் காட்சிகளோடு படம் நகர்ந்துகொண்டேயிருக்கிறது.

இதற்கு நடுவில் இயற்கை விவசாயம், தஞ்சை டெல்டாவில் மீத்தேன் போராட்டம், பூச்சிகளை வைத்து உயிரியல் யுத்தம் என பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறார் இயக்குனர்.

முந்தைய படங்களில் சற்று சோர்வாகத் தெரிந்த சூர்யா இந்தப் படத்தில் மீண்டும் விறுவிறுப்பாகியிருக்கிறார். மேலே சொன்ன கதையில் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியுமோ அவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறார்

மொத்ததில் காப்பான் விவசாயிகளன் நண்பன்…  Rank 3.5/5