Wednesday, October 28
Shadow

புரட்சிதலைவி ஜெயலலிதா தமிழ் சினிமாவில் அறிமுகமான சுவாரிச தகவல்!

ஜெயலலிதா அறிமுகமான படம் “வெண்ணிற ஆடை’. இந்தப் படத்தில் ஜெயலலிதாவுடன் நிர்மலா, மூர்த்தி, ஸ்ரீகாந்த் ஆகியோரும் அறிமுகமானார்கள். அதில் மூர்த்தியும், நிர்மலாவும் “வெண்ணிற ஆடை’யைத் தங்கள் பெயருக்கு முன் போட்டுக் கொண்டனர். “காதலிக்க நேரமில்லை’ நகைச்சுவைப் படத்தைத் தயாரித்து வெற்றி கண்ட ஸ்ரீதர், அடுத்த படத்தை முற்றிலும் மாறுபட்ட படமாகத் தரவிரும்பினார்.


.
பி.ஆர்.பந்துலுவின் “சின்னத கொம்பே’, கன்னடப்படத்தின் ரஷ்களைப் பார்த்த ஸ்ரீதர், அதில் நடித்த சின்னப் பெண் யார் என்று கேட்டார். அவர் நடிகை சந்தியாவின் மகள் ஜெயலலிதா என்று கூறினார்கள். தான் எடுக்கவிருக்கும் “வெண்ணிற ஆடை’யின் நாயகி என அவரை முடிவு செய்துகொண்டு, சந்தியாவுக்குத் தகவல் தந்தார். அவரும் தன் மகளைக் கூட்டிக் கொண்டு “சித்ராலயா’ அலுவலகம் போனார்.

படத்தின் கதாநாயகி ஆரம்பத்தில் பைத்தியம் பிடித்தவளாக இருப்பாள். பின்னர் இளமை பொங்கும் கதாநாயகியாக வந்து தன்னைக் குணப்படுத்திய டாக்டரை காதலிப்பார். இந்த இளம் விதவையின் பாத்திரம் பல்வேறு உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் பாத்திரம் என்று கதையைச் சுருக்கமாகக் கூறி, இதில் இந்த வேடத்தில் உன்னால் நடிக்க முடியுமா என்று ஸ்ரீதர் கேட்டார். முடியும் என்றார் ஜெயலலிதா. “உனக்கு நம்பிக்கை இருக்கிறதா’ என்ற கேள்விக்கு “இருக்கிறது’ என்று உறுதியாகப் பதில் தந்தார் அவர். உடனே கதாநாயகியாகவும் ஆனார். வண்ணத்தில் உருவான “வெண்ணிற ஆடை’ 1965ஆம் ஆண்டு வெளிவந்தது.

துள்ளித்திரியும் சிறுபெண்ணை அறிமுகம் செய்து, இளைஞன் ஒருவனைக் காதலிக்க வைத்து, இன்னொருத்தியை போட்டிக்கு உருவாக்கி, அந்தச் சின்னப் பெண் கல்யாணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழப்போகிறாள் என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து, கடைசியில் அவள் விதவை என்று பயங்கரக் குண்டைத் தூக்கி ரசிகர்கள் தலையில் போட்டு அவளை வெள்ளாடை அணிந்து வரச் செய்து திடுக்கிட வைத்தார் ஸ்ரீதர்.

சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதர் அலுவலகத்தில் பணியாற்றிவந்த, ராகினி ரிக்ரியேஷன் நாடகக் குழு நடிகர்களில் ஒருவராக நடித்துவந்த, வெங்கட்ராமனை ஸ்ரீகாந்த் என்ற பெயரில் நாயகனாக அறிமுகம் செய்தார் ஸ்ரீதர். அவரது ஜோடியாக ஆரம்பத்தில் தேர்வு செய்யப்பட்ட ஹேமமாலினி மிகவும் ஒல்லியாக இருந்ததால், அவரைப் படத்திலிருந்து நீக்கிவிட்டு, “காதலிக்க நேரமில்லை’ படத்தில் நடிக்க வந்து நிராகரிக்கப்பட்ட நிர்மலாவைத் தேர்வு செய்தார். ஸ்ரீதரால் நிராகரிக்கப்பட்ட ஹேமமாலினி பம்பாய் போனார். இந்தி சினிமாவின் கனவுக் கன்னி ஆனார்.

இந்தப் படத்தில் அறிமுகமானவர்களில் ஜெயலலிதாவின் நடிப்பு மிகவும் அபாரமாக இருந்தது. இந்த ஒரே படத்தில் அவர் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார்.

“அம்மம்மா காற்று வந்து’
“சித்திரமே சொல்லடி’ ,
“கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல’
“என்ன என்ன வார்த்தைகளோ

சின்ன விழிப் பார்வையிலே’ போன்ற கண்ணதாசனின் பாடல்கள் மெல்லிசை மன்னர்களின் இசையில் தித்தித்தன.பி.பி.ஸ்ரீனிவாஸ், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் மிக அருமையாக அந்தப் பாடல்களைப் பாடியிருந்தனர்.

இந்தப் படத்துக்கு முதலில் வரவேற்பு குறைவாக இருந்தபோதிலும், போகப் போக கூட்டம் அதிகரித்து படம் நூறு நாட்கள் ஓடியது. ஜெயலலிதா திரையுலகில் நம்பர் ஒன் நாயகி அளவுக்கு உயர இந்தப் படம் அடிகோலியது.1965ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிற ஆடை திரைப்படத்திற்குப் பல சிறப்புக்கள் உண்டு! டைரக்டர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் வெளிவந்த படம் அது. தமிழ்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் முதல் படம் அது. அதில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். அதில் ஒரு பாடல் கீழ்க்கண்ட பல்லவியுடன் துவங்கும்.

நாயகன்:
சித்திரமே சொல்லடி….. முத்தமிட்டால் என்னடி?
நித்தம்நித்தம் தென்றல் உன்னைத் தொட்டதில்லையோ?
தொட்டுத்தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ?

நாயகி:
கன்னிஇதழ் மீது தென்றல்படும்போது அதில் இல்லாத சுவை இருக்கும்
அந்தசுகம் வேறு சொந்தம்கொள்ளும் போது அதில் பொல்லாத பயம் இருக்கும்!
சித்திரமே நில்லடி……. முததமில்லை சொல்லடி!

பாடியவர்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ், ஜானகி.