Monday, April 20
Shadow

இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் பிறந்த தினம்

சேரன் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவரது மூன்று திரைப்படங்கள் தேசிய விருதைப் பெற்றுள்ளன. 2000 ஆம் ஆண்டில் ‘வெற்றிக் கொடி கட்டு’ திரைப்படத்துக்கும், 2004 ஆம் ஆண்டில் ‘ஆட்டோகிராப்’ திரைப்படத்துக்கும், 2005 ஆம் ஆண்டில் ‘தவமாய் தவமிருந்து’ திரைப்படத்துக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன.

சேரன் மதுரை மாவட்டம், மேலூர், கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் திசம்பர் 12, 1970 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பாண்டியன் வெள்ளலூர் உள்ள திரையரங்கத்தில் படம் ஓட்டுநராக பணி புரிந்தார். தாயார் கமலா தன் கிராமத்திலே தொடக்க பள்ளி ஆசிரியை ஆக வேலை பார்த்தார். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சிறிய வயதில் நாடகங்களில் நடித்தும் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், சூன் 19, 2011 அன்று நடந்த தேர்தலில், போட்டியின்றித் தேர்வுச் செய்யப்பட்ட இரு துணைத்தலைவர்களில் சேரனும் ஒருவர் ஆவார்.

திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடர சென்னை வந்தார். ஆரம்பத்தில் அவர் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் திரைப்படத்தில் முதன் முதலாய் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

உதவி இயக்குனராக இருந்த அவர் பார்த்திபன்-மீனா நடித்த பாரதி கண்ணம்மா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கினாலும் வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து பொற்காலம், பாண்டவர் பூமி, வெற்றிக் கொடி கட்டு போன்ற சமூக அவலங்களை சித்தரித்தே எடுத்தார். இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவர் முரண் எனும் திரைப்படத்தினை தயாரித்தார்.

சேரன், தங்கர் பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதையில் கதாநாயகனாக நடித்து பாராட்டு பெற்றார். பின்னர் பொக்கிஷம் என்ற படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. நடிகர் விக்ரம் நடிக்க ஆட்டோகிராப் படம் தயாரானது. அழைப்புக் கடிதம் பிரச்சனையால் அதுவும் கைவிடப்பட்டு, பின்னர் அதில் இவரே கதாநாயகனாக நடித்து மற்றும் இயக்கவும் செய்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 2004இல் ஆரம்பித்த பொக்கிஷம் படம் 2009இல் வெளிவந்தது.

ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சேரன் “இலங்கைத் தமிழர்களுக்காக இங்கே, நாங்கள் எல்லாம், திரையுலகமே குரல் கொடுத்துள்ளோம். .. எங்களுடைய எல்லாவற்றையும் இழந்துவிட்டுப் போராடியுள்ளோம்… ஏன் இதையெல்லாம் பண்ணினோம் என்று அருவருப்பாகவுள்ளது…” என்று முறையற்ற டிவிடி மற்றும் இணையப் பதிவேற்றம் செய்பவர்களாக இலங்கைத் தமிழர்களைக் குறிப்பிட்டது சர்ச்சையை உருவாக்கியது. பின்னர், தான் குறிப்பிட்டது குறிப்பிட்ட சிலரைத்தான் ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களையும் அல்ல என சேரனால் மறுப்பு வெளியிடப்பட்டது. ஆயினும், இலங்கைத் தமிழர்கள் சார்பில் சேரன் போராட்டத்தையும் முறையற்ற டிவிடி விஷயத்தையும் தொடர்புபடுத்தியிருக்கக் கூடாது என்றும், வியாபாரத்தையும் போராட்டத்தையும் சேர்க்க வேண்டாம் என்றும், அல்லது இலங்கைத் தமிழர்களுக்காக என்பதில் சில அல்லது குறிப்பிட்ட இலங்கைத் தமிழர்களுக்காக என தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் பதிலளிக்கப்பட்டது.

இவர் இயக்கிய திரைப்படங்கள்

பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிசம், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை

இவர் நடித்த திரைப்படங்கள்

காதல் வைரசு, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, பொக்கிசம், யுத்தம் செய், முரண்