நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மறைந்த தினம்
ஓமக்குச்சி நரசிம்மன் ஒரு பழம்பெரும் தமிழ் நகைச்சுவை நடிகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ஔவையார் (1953) திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஓமக்குச்சி நரசிம்மன். அதன் பிறகு சென்னையில் எல்.ஐ.சியில் பணிபுரிந்தபடியே 1969 ஆம் ஆண்டு “திருக்கல்யாணம்’ படத்தில் நடித்தார். தொடர்ந்து சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு, குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் எனக்கு அரசன், போக்கிரிராஜா உட்படப் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
“இந்தியன் சம்மர்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ள இவர், தலைநகரம் படத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை.
நாடக இயக்குனர் தில்லைராஜனின், “நாரதரும் நான்கு திருடர்களும்” என்ற நாடகத்தில் நரசிம்மன், கராத்தே பயில்வான் வேடத்தில் நடித்தார். இக்காட்சி நகைச்சுவையாக அமைய வேண்டும் என்பதற்காக யப்பானைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை நாடகத்தில் கேரக்டர் பெயராக வைக்க இயக்குனர் முடிவு செய்தபோது, தமிழில் அப்பெயரை ஓமக்குச்சி என்று வைத்தால் நகைச்சுவையாக இருக்கும் என்று நினைத்து, அப்பெயரையே வைத்தார். இந்த நாடகத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால், நூறு நாட்கள் வரை நடந்தது. அதிலிருந்தே நரசிம்மனை, “ஓமக்குச்சி நரசிம்மன்” என அழைக்க ஆரம்பித்தனர்.
இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நரசிம்மன், தனது 73வது அகவையில் 2009, மார்ச் 11, புதன் இரவு 9.30 மணிக்கு சென்னையில் இறந்தார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.