

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய பெரும் இமயங்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் உருவாக ஆரம்பித்த நேரத்தில் சின்னப் பூவே மெல்லப் பேசு படம் மூலம் ஹீரோவாக வந்தவர் ராம்கி. அதன் பின்னர் ஏகப்பட்ட படங்களில் நடித்தார். பெரிய ஹீரோவாகாவிட்டாலும் கூட பிசியான ஹீரோவாகவே இருந்தவர் ராம்கி.
இவர் குறித்து நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பிய சேதி இதோ:
ராம்கி அடையாறு திரைப்பட கல்லூரியில் நடிப்புப் பயிற்சியில் பட்டயச் சான்று பெற்றவர். அவர் இண்டர்வியூவிற்கு சென்ற போது, மனோரமா அவர்கள் தான் அவரது திறமையை பரிசோதித்தவர். உனக்கு சீட் கிடையாதுப்பா என்று சொன்ன போது அவர் உடனே பொங்கி அழுது விட்டாராம். உடனே மனோரமா அவர்கள் இப்படி சென்சிட்டிவ்வாக இருப்பது ஒரு நடிகனுக்கு மிக அவசியம் என்று சொல்லி சீட் வழங்கினாராம். சின்னப்பூவே மெல்லப்பேசு படம் வெளியாகி பரவலான கவனிப்பை தமிழகம் முழுவதும் ராம்கி பெற்றிருந்த நேரம். எந்த பத்திரிக்கையை எடுத்தாலும் அவரின் பேட்டி இருக்கும். அதில் இந்த சம்பவத்தை தவறாமல் கூறியிருப்பார்.

சின்னப் பூவே மெல்லப் பேசு படத்தில் கல்லூரி மாணவன் வேடம். படம் பார்த்தவர்களில் பெரும்பாலோனோர், முதல் படம் மாதிரியே தெரியலையே? நல்லா நடிச்சிருக்கானே! என்று ஆச்சரியப்பட்டார்கள். தொடர்ந்து நாலு வருடங்கள் பலவிதமான கேரக்டர்களில் நடித்தார் ராம்கி. எல்லாமே தமிழக மக்கள் தங்கள் மனம் கவரும் நாயகனை அடையாளம் கண்டு கொள்ளும் வகையிலான கேரக்டர்களே.
பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தங்கை மேல் அளவிலா பாசம் கொண்ட அண்ணனாக “தங்கச்சி”, ஆபாவாணன் உள்ளிட்ட திரைப்பட கல்லூரி மாணவர்களின் தயாரிப்பில் உருவான ”செந்தூரப்பூவே”, அழகப்பன் இயக்கத்தில் உருவான “இரண்டில் ஒன்று”, ஆர் சி சக்தி இயக்கத்தில் “அம்மா பிள்ளை”, ஆபாவாணனின் இணைந்த கைகள், முன்னாள் மத்திய மற்றும் மாநில அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசு கதை வசனம் எழுதிய மருதுபாண்டி, மனோஜ்குமார் இயக்கத்தில் வெள்ளையத்தேவன், பாரதி மோகன் இயக்கத்தில் “ஒரு தொட்டில் சபதம், மனோ பாலா இயக்கத்தில் போலிஸ் அதிகாரியாக “வெற்றிப்படிகள்”, கவலையற்ற இளைஞனாக ஏவிஎம்மின் பெண்புத்தி முன் புத்தி என ஒன்றுக்கொன்று வித்தியாசமான வேடங்களில் நடித்தார் ராம்கி.
1992 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலையின் அடிப்படையில் செல்வமணி இயக்கிய ”குற்றப்பத்திரிக்கை” படத்தில் ஒப்பந்தமானார். புலன் விசாரனை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி என தொடர் வெற்றிகளுக்குப் பின்னர் செல்வமணி இயக்கிய படம். இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருமே ஏதாவது ஒருவகையில் தங்கள் கேரியரில் இறக்கத்தை சம்பாதித்தார்கள்.அதில் ஒருவர் ராம்கி. குற்றப்பத்திரிக்கை படம் வெளியாவதில் இருந்த பிரச்சினைகள் காரணமாக ஓராண்டிற்கு எந்தப் படமும் ராம்கிக்கு வெளிவராமல் போனது.
அதன்பின்னர் ஆத்மா, பாஸ்மார்க் ஆகிய படங்களில் நடித்தார். அப்போது புதிதாய் வந்திருந்த ரசிகர்கள் இது பழைய ஆளுடா என்ற கண்ணோட்டத்தில் ராம்கியைப் பார்த்தார்கள். ஓராண்டு இடைவெளி என்பது சாதாரணமான ஒன்றுதான். விக்ரம் போன்ற நடிகர்கள் இரண்டாண்டுகள் வரை ஒரு படத்திற்காக மெனக்கெடுகிறார்கள். ஆனால் அப்போதைய காலகட்டத்தில் மார்க்கட் இழந்து மீண்டும் ரீ எண்ட்ரி ஆனவரைப் போலவே ராம்கியை பலர் கருதினார்கள்.
1994 ஆம் ஆண்டில் கேயார் இயக்கிய ”வனஜா கிரிஜா” வில் நெப்போலியனுடன் இணைந்து நடித்தார். கேயார் சற்று நவீனப்படுத்தப்பட்ட ராம நாராயணன். இந்தப் படத்தைத் தொடர்ந்து இரண்டு நாயகர்களில் ஒருவராக அல்லது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் வாய்ப்புக் கிடைத்தது ராம்கிக்கு. கேயார் தன்னுடைய படங்களில் தொடர்ந்து ராம்கியைப் பயன்படுத்தினார். மாயாபஜார், எனக்கொரு மகன் பிறப்பான், இரட்டை ரோஜா ஆகிய நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் ராம்கி தொடர்ந்து நடித்தார். கேயார், விஜயசாந்தியை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து நின்று போன ஜான்ஸியிலும் ராம்கிதான் ஹீரோ. ஆனாலும் இடை இடையே கருப்பு ரோஜா, ராஜாளி என இன்ஸ்டியூட் மாணவர்களின் படங்களில் ஆக்ஷன் ரோல்களிலும் நடித்து வந்தார்.
ரங்கநாதன் இயக்கிய ”ஆஹா என்ன பொருத்தம்”, ரமேஷ் கண்ணன் இயக்கிய தடயம், களஞ்சியம் இயக்கத்தில் கார்த்திக்குடன் இணைந்து நிலவே முகம் காட்டு ஆகிய படங்களில் நடித்தாலும் மக்களின் கவனத்தை கவர முடியவில்லை.
2000 ஆவது ஆண்டில் கேயாரின் ஒரிஜினலான ராம நாராயணனின் “பாளையத்து அம்மன்” படத்தில் நடித்தார் ராம்கி. தொடர்ந்து விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஷக்கலக்க பேபி ஆகிய நகைச்சுவை நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ராம நாராயணன் இயக்கிய படங்களில் நடித்தார். இந்தப் படங்களில் கிட்டத்தட்ட செட் பிராப்பர்டி போலவே ராம்கி பயன்படுத்தப் பட்டார். ஒஹோ இவர் இப்போ இந்த மாதிரிப் படங்களில் தான் நடிக்கிறாரோ என்பதை உறுதிப்படுத்துவது போல புகழ்மணி இயக்கிய “படை வீட்டு அம்மன்” படத்திலும் நடித்தார். அத்தோடு சரி. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாசாணி, பிரியாணி ஆகிய படங்களில் நடித்தார்.
முதல் படத்தில் நன்கு பெயர் வாங்கிய நடிகர், அடுத்தடுத்து வெரைட்டியான ரோலகளில் நடித்தவர், வெற்றி பெற்ற படங்களில் பங்கெடுத்த நடிகர், தொடர்ந்து தன்னை தக்க வைக்க முடியாமல் போக என்ன காரணம்? பின்னர் ஓரளவு வாய்ப்புகள் கிடைத்து நடித்துக் கொண்டு இருக்கும் போதே பத்தாண்டுகள் அளவிற்கு வாய்ப்பில்லாமல், திரைத்துறையினரால் மறக்கப் படுவதற்கு என்ன காரணம்?
முதற் காரணமாகத் தோன்றுவது சரியான மக்கள் தொடர்பு இல்லாமை. செந்தூரப் பூவே படத்தில் ராம்கியின் ஜோடியாக அறிமுகமானார் நிரோஷா. தொடர்ந்து சில படங்களில் இருவரும் ஜோடியாக நடித்தனர். அந்தக் காலகட்டத்தில் வந்த சினிமா பத்திரிக்கை மற்றும் வார இதழ்களில் ராம்கி/நிரோஷாவைப் பற்றிய கிசு கிசு வராத வாரமில்லை. தாலி கட்டாமல் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகிறார்கள், அடுத்த மாதம் கல்யாணம் என விதவிதமாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தது. இப்போதைய காலகட்டத்தில் இம்மாதிரி கிசுகிசுக்கள் நடிகர்களுக்கு பலத்த கவனிப்பை மக்களிடையே பெற்றுத்தருகின்றன. ஆனால் ஒப்பீட்டளவில் கன்சர்வேடிவ் மனநிலையில் இருந்த 80களின் இறுதியில் மக்கள் இதை ஒவ்வாமையுடன் தான் பார்த்தார்கள்.
மேலும் நாயகன் என்றால் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் அல்லது உதவி செய்வது போன்ற செய்திகளையாவது பத்திரிக்கையில் வரவைக்க வேண்டும். வெற்றிபெற்ற நடிகர்கள் அனைவருமே இதில் தனி சிரத்தை எடுத்திருப்பார்கள். ஆனால் ராம்கி இம்மாதிரி வேலைகளை எல்லாம் செய்யவில்லை. குற்றப்பத்திரிக்கை படம் தாமதமான சமயத்தில் ஒரு அனுதாபம் ஏற்படுமாறு செய்திகளை வரவைப்பதில் ஏதும் ஆர்வம் காட்டவில்லை. முதல் படம் நடித்து முடித்த நிலையில் தொடர்ந்து பத்திரிக்கைகளில் பேட்டி கொடுத்தவர் பின்னர் அதைக் கடைப் பிடிக்கவில்லை. அவ்வளவு ஏன்? 2000க்குப் பின்னர் செயற்கைக்கோள் தொலைக்காட்சி முதல் நிலை ஊடகமாக வளர்ச்சியடைந்த பின்னர் அதில் பங்கெடுப்பதில் ராம்கி எந்த ஆர்வமும் காட்டவில்லை. இதனால் பல ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் முடங்கிக் கிடக்கும் நிலை ராம்கிக்கு ஏற்பட்டது.
காலப் போக்கில் ஏகப்பட்ட இளம் ஹீரோக்கள் குவியத் தொடங்கியதால் ராம்கிக்கு வாய்ப்புகள் குறைந்தன.
சில பல மாசங்களுக்கு முன் இயக்குநராகப் போகிறார் என்று சேதி எட்டிப் பார்த்துச்சு..
ஆனாலும் கோலிவுட்டில் ஒரு ஆக்டராக தன்னை அடையாளம் காண்பித்த ராம்கி-க்கு நம் *ஆந்தை சினிமா அப்டேட் குழு* பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வதில் மகிழ்ச்சிக் கொள்கிறது
