
எஸ். டி. சுந்தரம் ஒரு இந்திய தமிழ் எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், கவிஞர், திரைப்பட இயக்குநர் ஆவார்.
ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், பட்டினத்தார் பாடல்கள், வள்ளலாரின் திருவருட்பா எல்லாம் இவருக்கு மனப்பாடம். தனது 12 ஆவது வயதில் நவாப் இராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்தார். இவருக்கிருந்த தமிழ்ப் புலமையைக் கண்ட நவாப் இராஜமாணிக்கம் இவரை 1934 ஆம் ஆண்டு திருவையாறு அரசு கலைக் கல்லூரியில் சேர்த்தார். அங்கு தமிழ் வித்வான் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
1942 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதனால் சிறைத்தண்டனை பெற்றார். தஞ்சாவூர் சிறையில் 9 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
சிறைவாசத்திலிருந்து விடுதலையானதும் மீண்டும் நவாப் இராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்தார். சிறையிலிருந்தபோது கவியின் கனவு என்ற நாடகத்தை எழுதியிருந்தார். இது பெரும்பாலும் நாட்டு விடுதலை பற்றிய அவரின் சொந்தக் கனவை வைத்தே எழுதப்பட்டது.
1945 ஆம் ஆண்டு குருநாதர் ஆசியுடன் இவரும் சக்தி கிருஷ்ணசாமியும் இணைந்து சக்தி நாடக சபா வைத் தொடங்கி இவரது கவியின் கனவு நாடகத்தை அரங்கேற்றினார்கள். இந்த நாடகத்தில் சிவாஜி கணேசன், எம். என். நம்பியார், எஸ். வி. சுப்பையா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.
கவியின் கனவு நாடகம் மிகவும் புகழ் பெற்று 1500 தடவைகளுக்கு மேல் மேடையேறியது. ஒரு தடவை நாகப்பட்டினத்தில் இந்த நாடகம் அரங்கேறியபோது கவியின் கனவு ஸ்பெஷல் என ஒரு சிறப்பு தொடர்வண்டி திருச்சியிலிருந்து விடப்பட்டது.
1946 ஆம் ஆண்டு எம். ஜி. ஆர். – வி. என். ஜானகி முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்த மோகினி திரைப்படத்துக்கு கதை வசனம், பாடல்கள் எழுதினார்.
1953 ஆம் ஆண்டு மனிதனும் மிருகமும் என்ற திரைப்படத்தை கே. வேம்பு வுடன் சேர்ந்து இயக்கினார். சிவாஜி கணேசன், மாதுரிதேவி, கே. சாரங்கபாணி, டி. ஆர். ராமச்சந்திரன் இத்திரைப்படத்தில் நடித்தனர்.
1962 ஆம் ஆண்டு இந்தியா – சீனா போரின் போது சிங்கநாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது என்ற ஆவணப்படத்தைத் தன் சொந்தச் செலவில் தயாரித்து வெளியிட்டார். தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகளிலெல்லாம் திரையிடப்பட்ட இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் உட்பட புகழ் பெற்ற நடிகர்கள் பலரும் நடித்திருந்தனர்.
வசனம், பாடல்கள் எழுதிய திரைப்படங்கள்: மோகினி, லைலா மஜ்னு, கள்வனின் காதலி, மனிதனும் மிருகமும், விப்ர நாராயணா, சாரங்கதாரா, கப்பலோட்டிய தமிழன்
