
சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ். வி. சேகர் (பிறப்பு: 26 திசம்பர், 1950) தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். 2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், பிறகு அக்கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். இவருடைய நாடக வசனங்கள் நகைச்சுவைக்காக அறியப்பட்டாலும், அவற்றில் தொனிக்கும் நெருடலான இரட்டை அர்த்தங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. 1974-இல் முதல் இவர் தன்னுடைய கலைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
எஸ். வி. சேகர், இயந்திரவியல் துறையில் பட்டையப்படிப்பும், காற்று பதனாக்க கருவி மற்றும் குளிர்சாதன பெட்டி சரிசெய்தல் போன்றவற்றிலும் பட்டயம் பெற்றுள்ளார். இவர் ஒலிப்பதிவாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், நிகழ்படமெடுப்பது, தொகுத்தல், இயக்குதல், என பல்வேறு தொழில்களை செய்துள்ளார். “நாரதர்” தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.
வானொலி நிகழ்ச்சிகள் தயாரிப்பு, நாடகங்களுக்காக சிறப்பு ஒலிகள் தயாரிப்பு, நாடக சம்பத்தப்பட்ட விசயங்களில் கைதேர்ந்தவர் என்று அறியப்பட்டவர். இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி பயிற்சிபெறுபவர்களின் கூட்டமைப்பிலிருந்து, சிறந்த அனைத்திந்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர் விருது–ஐ தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பெற்றிருக்கிறார்.[சான்று தேவை] இலங்கை வானொலிக்காக 275 க்கும் மேற்பட்ட ஒலிச்சித்திரங்களை தயாரித்திருக்கிறார்.
இவர் திரைப்படங்களுக்கான மத்திய தணிக்கை குழுவில் மாநில தலைவராக பணியாற்றியிருக்கிறார்.
1974–இல் நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். இவர் இதுவரையிலும் சுமார் 24 நாடகங்களை தயாரித்து, 5400 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார். இவர் அறிமுகப்படுத்தியவர்கள் சிலர், கிரேசி மோகன், கோபு-பாபு, கிருஷ்ணகுமார், நிலா. இவர் கதாநாயகனாகவும், முக்கிய பாத்திரங்களிலும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
முதன் முதலாக முழுதும் வெளிநாட்டில் வெளிநாடுகளில் (அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், கொரியா, இந்தோனேசியா) எடுக்கப்பட்ட “அமெரிக்காவில் அருக்கானி” தொலைக்காட்சி தொடரை இயக்கி தயாரித்தவர்.[சான்று தேவை]
தன்னுடைய “பெரியதம்பி” நாடகத்தை அமெரிக்காவின் நியூஜெர்சியிலும், வாஷிங்டனிலும், குவைத்திலும் நடத்தினார். அதுமட்டுமின்றி அமெரிக்கா, கனடா, துபாய், அபுதாபி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாங்காக், ஆகிய நாடுகளில் தன் குழுவுடன் தன் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அமெரிக்காவில் 32 நாட்களில் தன் நாடகக்குழுவினருடன் 28 முழுநீள நாடகக்காட்சிகளை நடத்தி உள்ளார்.
15 ஆண்டுகளாக சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவராக இருந்து வருகிறார். பிராமணர்கள் ஒற்றுமைக்காக பெடரேசன் ஆப் ப்ராமின் அசோசியேசன்ஸ் சதர்ன் ரீஜியன்(Federation of Brahmin Associations Southern region (FEBAS)) என்ற அமைப்பை துவக்கியுள்ளார்.
