
நான் பிறந்த பத்து மாதத்தில் அப்பா இறந்து விட்டார். என் நாலு வயதில் 14 வயது அண்ணன் ஒரே நாள் காய்ச்சல் பிளேக்கில் இறந்து விட்டான். 1945–46ல் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. ராகிக்கே கஷ்டம். பொங்கல் தீபாவளிக்குத்தான் அரிசிச்சோறு என்கிற நிலை.
தைப் பொங்கலுக்குத்தான் அரிசி சாதம் கிடைக்கும் நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது ‘தைப் பொங்கல் அரிசிச்சோறு போடமுடியாத நீ என்னை ஏன் பெத்தே?’என்று அம்மாவிடம் கேட்டேன்.
வயலுக்கு அம்மா காலை 6 மணிக்குப் போய் மாலை 6 மணிக்கு வருவார். கழனியில் கஷ்டப்படுவார். 5 குழந்தைகள் இறந்து தங்கிய ஒரே ஆண்குழந்தை நான்தான். பிடி அரிசி ஒளித்து வைத்து ஆக்கிய அந்த சோற்றைத்தான் ஸ்கூலுக்கு எனக்குக் கொடுப்பார். சனி ஞாயிறு அதுவும் இருக்காது! வறுமைச் சூழலால் அக்கா, தங்கையைப் படிக்கவைக்க முடியவில்லை. இப்போது தீபாவளி, பொங்கல் டிரஸ் எடுப்பது பற்றிப் பேசுகிறோம். எனக்கு சிரிப்பாக வரும். அப்போது இப்படி எடுக்க மாட்டார்கள். சட்டை கிழிந்தால்தான் அடுத்த சட்டை வரும்.
அப்போது எஸ்.எஸ்.எல்.சிக்கு கட்டணம் ஐந்தேகால் ரூபாய் அது கட்டவே சிரமப்பட்டேன் தேர்வுக் கட்டணம். 11.50 கேட்டபோது அம்மா கோபித்துக் கொண்டார்.நாங்கள் பள்ளியில் க்ரூப் போட்டோ எடுக்க 5 ரூபாய் என்னால் கொடுக்க முடியவில்லை. அதனால் நான் படமே எடுக்க முடியவில்லை. 192 படங்கள் 175 படங்கள் கதாநாயகன் என்று நடித்ததை கணக்கிட்டால் என் முகம் 4 கோடி ப்ரேமில் இருக்கிறது. ஆனால் அந்த 5 ரூபாய் இல்லாமல் பள்ளியில் க்ரூப் போட்டோ எடுக்கமுடியவில்லை அப்போது 1957ல் எடுக்க முடியாத படத்தை 50 வருஷம் கழித்து விஜய் டிவி மூலம் எடுத்த போது என் கூட நடித்த பலர் பாட்டியாகி விட்டனர். எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த இளம்வயது படத்தை இப்போது எடுக்க முடியுமா??
– ?சிவகுமார் ஒரு மேடையில் பேசியதிலிருந்து
