
விஜய் இயற்பெயர்: ஜோசப் விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை ” இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இவருக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, சப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.
விஜய் தனது 10வது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி (1988) திரைப்படம் வரை குழந்தை நட்சத்திரமாகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முதன்முறையாகக் கதாநாயகனாக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. இன்று வரை விஜய் கதாநாயகனாக 62 திரைப்படங்களில் நடித்துள்ளார். 3 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 1 காஸ்மோபாலிடன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சிமா விருது, 8 விஜய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். ஒரு முறை ஐக்கிய இராச்சிய தேசிய திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஒரு பின்னணிப் பாடகராக பம்பாய் சிட்டி (1994) முதல் பாப்பா பாப்பா (2017) வரை விஜய் 32 பாடல்களைப் பாடியுள்ளார். நடிப்பு மற்றும் பாடல்கள் தவிர இவர் ஒரு சிறந்த நடனம் ஆடுபவரும் ஆவார். இவரது படங்கள் சீனாவின் ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழா, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சர்வதேசத் திரைப்பட விழா மற்றும் தென்கொரியாவின் புச்சியான் சர்வதேசத் திரைப்பட விழா ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன.

விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
விஜய்க்காக தளபதி ஆன்தம் என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். எங்கேயும் எப்போதும் படத்தில் பேருந்து காட்சிகளில், கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்.

2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. 2017 ஆண்டு மெர்சல் படத்தின் மூலம் பிழையான GST வரி விபரங்களை கூறியதாக, அரசியல் வட்டாரங்களில் மிகவும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.
