
சண்முகசுந்தரி ஒரு தமிழ் நடிகை. இவர் பின்னணி பாடகியும், நடிகையுமான டி.கே.கலாவின் தாயார். எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சண்முகசுந்தரி.
தன்னுடைய ஐந்தாம் அகவையில் இருந்து, நாடகங்களில் நடித்து வந்துள்ளார். சுமார் 45 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். இதுவரையிலும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான படங்களுக்கு டப்பிங் எனப்படும் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
இவர் எம்.ஜி.ஆருடன் இதயக்கனி, நீரும் நெருப்பும், கண்ணன் என் காதலன், என் அண்ணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சிவாஜியுடன் லட்சுமி கல்யாணம்,வடிவுக்கு வளைகாப்பு படங்களிலும், ஜெமினியுடன் மாலதி படத்திலும் நடித்துள்ளார்.
இவர் நாடகம் மற்றும் திரைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக, தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.
நடிகர் வடிவேலுவுக்கு நிறைய படங்களில் அம்மாவாகவும் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மிடில் க்ளாஸ் மாதவன் படத்தில் வடிவேலு குடித்துவிட்டு, சண்முகசுந்தரியை பார்த்து பேசும் அது வேற வாய்… இதுநாற வாய் என்ற நகைச்சுவை மிகவும் பிரபல்யம்.
சண்முகசுந்தரிக்கு டி.கே.கலா, நீலா, மாலா, மீனா, செல்வி என்ற 5 மகள்கள் உள்ளனர். இவர்களில் டி.கே.கலா சினிமாவில் பின்னணி பாடகியாகவும், நடிகையாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு மே 1-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த சண்முகசுந்தரி மரணம் அடைந்தார்.