ஸ்ரீவித்யா ஒரு புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கர்நாடக இசை பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகள். இவர் 1970களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை நடித்து வந்தார். 2003ஆம் ஆண்டு மார்புப் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இவர் 2006, அக்டோபர் 19ஆம் தேதி இறந்தார்.
திரைப்படத் துறையில் தங்களது அழகிய முகத்தாலும், மந்தகாச மேனியாலும், கொஞ்சும் குரலாலும், குறையில்லாத நடிப்பாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு, கவர்ந்து, தங்கள் வசம் இழுத்துக் கொள்பவர்கள் நடிகைகள். இவை அனைத்தும் ஒன்றாகப் பெற்று கலைத் துறையில் கம்பீரமாக நடைபோட்டவர்கள் மிகச் சிலரே. அதில் ஸ்ரீவித்யாவிற்கு அப்படிச் சில பேர்களில் நம் மனதில் தனி இடம் கொடுத்து நிச்சயம் போற்றப்பட வேண்டிய ஒரு சிறந்த நடிகைதான் ஸ்ரீவித்யா.
சகல அம்சங்களுடனும் நம் தமிழ்த்திரை உலகில் மட்டுமில்லாமல் தென்னக திரைஉலகம் முழுமையுமே ஆக்கிரமித்து தன் விஸ்வரூப நடிப்பால் வியாபித்து சகல ரசிகர்களையும் தனக்கென சம்பாதித்து வைத்திருந்த ஸ்ரீவித்யா நாடு தழுவிய பட்டங்களையும் பரிசுகளையும் கூட விட்டு வைக்கவில்லை என்பதும் உண்மை. தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று ””பாரத நாட்டுக் கலைச்செல்வி “”யின் செல்லப் பிள்ளையாகவே வலம் வந்தவர்.
1970 தொட்டு 2000 வரை சுமார் 30 ஆண்டுகளாக தனது மிகத் துல்லியமான தேர்ந்த நடிப்பாலும், அழகு வதனத்தாலும், பேசும் விழிகளாலும், தென்னகத்திரை உலகையே தன் வசப்படுத்தி ரசிகர்களை மெய் மறக்க வைத்திருந்த நடிகை ஸ்ரீவித்யா, கர்னாடக இசையை தன் தேன் குரலால் உலகம் முழுவதும் பரப்பிய தேவகானக் குயில் திருமதி எம்.எல்.வசந்தகுமாரிக்கும், பல குரல் வேந்தனாய்த் திகழ்ந்த திரு விகடம் கிருஷ்ன மூர்த்திக்கும் 1953ல் செல்வ மகளாய்ப் பிறந்து. செல்ல மகளாயும் திகழ்ந்தவர்
சென்னையில், மிகப் பிரசித்தமான மைலாப்பூர் பகுதியில் ப்ரம்மாண்டமான தனது இல்லத்தில் வசதியுடன் இளம் பருவ வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பிறந்து வளர்ந்த சமயங்களிலெல்லாம் இவரின் வீட்டைச் சுற்றிலும் ,அதே பகுதியிலும் பிரபலமான கலைஞர்களும், பல முக்கியப் பிரமுகர்களும் வசித்து வந்ததால் இவரின் இளம் பருவம் தொட்டே கலை ஞானமும், அதை ஊக்குவிக்கும் நபர்களின், உறவும் நட்பும் நிறையவே கிடைத்து வந்தன.
நாட்டியப் பேரொளி பத்மினி சகோதரிகள் இவரின் எதிர்வீட்டில் வசித்ததால் எப்போதும் அவரின் தத்துப்பிள்ளை போன்றே வளர்க்கப்பட்டார். 4 தாய்களின் செல்லப்பிள்ளை எண்றும் இவரைக் கூறலாம். {போட்டோ} அப்படியாக அவரின் கலை ஆர்வமும் வளர்க்கப்பட்டது. கபடமற்ற குணமும் நகைச்சுவை உணர்வும் எதையும் தீர்க்கமாய் உணரும் தன்மையும் இவரை சிறு பிராயம் தொட்டே தனித்து சிறப்பாகக் காட்டியது.
வித்தி என்று செல்லமாக அழைக்கப்பட்ட வித்யா தன் பெயருக்குத் தகுந்தார்ப் போன்றே சகல கல்வி கேள்விகளில் சிறந்து அந்தக் கலைமகளான ஸ்ரீவித்யாவைப் போன்றே விளங்கினார். தாய் எம்.எல்.வியோ மனோகரமான இசையால் பொருளீட்டும் தன லட்சுமியாகத் திகழ்ந்தார். நாளொரு கலையும் பொழுதொரு அரவணைப்புமாய் தன் படிப்புக்கும் பாதிப்பில்லாமல் கலைப் பயிற்ச்சியுடன் சிறுமிப் பருவம் கடந்து குமரிப் பருவத்தை எட்டினார் ஸ்ரீவித்யா. தன் தாயின் இசையும். தந்தையின் விகடமும், தனது பரதமும், என்று பாரதம் முழுக்க பிரபலங்களின் பாராட்டுக்களுடன் வலம் வந்தார்கள்.
இவர் தனது கல்வியில் மெட்ரிக்குலேசன் படிப்பை முடிக்கும் சமயம் சிறப்பான கலைதாகத்தையும் கலா மேதமையையும் கண்ட பலரின் யோசனைப்படி இவர் நாட்டியம் மற்றும் நடிப்புத் துறைக்குள் அடி எடுத்து வைத்தார். சகல கலைகளிலும் பயிற்சியும் தேற்சியும் பெற்று கலைமகளின் திருவருட்ச் செல்வியாகத் திகழ்ந்த இவருக்கு பக்தி இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கிய திருவருள் செல்வர் என்ற அற்புதப் படைப்பே சிறப்பாக நாட்டியமாடி நடிக்கும் வாய்ப்பை முதல் முதலாக வழங்கியது.
அதன்மூலம் வெற்றி என்ற மூன்றெழுத்தைப் பெற்ற இவருக்கு அடுத்ததாக அமைந்த வாய்ப்போ நடிகர் ரவிச்சந்திரன் செல்வி ஜெயலலிதாவுடனான மூன்றெழுத்து திரைப்படம். பிறகு தொடங்கியது திரைப்படத் துறையிலான இவரது புலிப் பாய்ச்சலான வேகம்.
துவக்க காலத்திலேயே இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் போன்றோரின் மூலமான அற்புத வாய்ப்புகள் நிறையக் கிடைத்ததால் இவரின் திறமையும் பட்டை தீட்டிய வைரமாய் மின்னியது. காலம் செல்லச் செல்ல தென்னக மொழிப் படங்கள் அத்தனையிலுமே இவரின் கலையாதிக்கம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது.
புகழின் உச்சிக்குச் சென்ற ஸ்ரீவித்யா தனக்கென ஒரு துணையைத் தேடும் முயற்சியில் இறங்கினார். அங்குதான் அவரின் கபடமற்ற, எதையும் நல்லதாகவே நம்பும் குழந்தை மனம் அவரை ஏமாற்றி மன வாழ்க்கையில் குப்புறத் தள்ளியது. கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் தாமஸ் என்பவரை தான் திருமணம் செய்வதாகவே தீர்மானித்து விட்டதாக தன் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் கூறியபோது அவர்கள் அதிர்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும் அவரைப் பார்த்தனர்.