
சென்னை: தல தயவு செய்து அடுத்த படத்தில் வேறு ஒரு இயக்குனருடன் பணியாற்றுங்கள் என்று ரசிகர்கள் அஜீத்துக்கு அன்பு கோரிக்கை வைத்துள்ளனர்.
வீரம் படம் மூலம் அஜீத் இயக்குனர் சிவாவுடன் கைகோர்த்தபோது அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். மீண்டும் வேதாளம் படத்தில் ஒன்று சேர்ந்தபோது பரவாயில்லை என்றார்கள். மூன்றாவது முறையாக விவேகம் படத்தில் ஒன்று சேர்ந்தனர். சரி போகட்டும் என்று இருந்தார்கள் ரசிகர்கள்.
நான்காவது முறையாக தற்போது விஸ்வாசம் படத்திலும் ஒன்று சேர்ந்துள்ளார்கள் அஜீத்தும், சிவாவும். இதை பார்த்து தல ரசிகர்களுக்கே லைட்டா கண்ணை கட்டிவிட்டது.
விவேகம் படத்தை தல ரசிகர்கள் கொண்டாடினார்கள். இல்லை எனவில்லை. ஆனால் படத்தில் வந்த சில காட்சிகளை தல ரசிகர்களாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் தலக்காக பொறுத்துக் கொண்டனர். அந்த அளவுக்கு பொறுமையை சோதித்தன சில காட்சிகள்.
விவேகம் படத்தோடு அஜீத் சிவாவை விட்டுவிட்டு வேறு இயக்குனர் படத்தில் நடிக்கட்டும். இந்த கூட்டணி மறுபடியும் சேர வேண்டாம் என்று தல ரசிகர்கள் பலர் பிரார்த்தனை செய்தனர். அது நடக்கவில்லை.
உங்க விஸ்வாசத்தை மதிக்கிறோம். இத்தோடு சிவாவை விட்டுவிட்டு வேறு இயக்குனர்களின் படத்திலும் நடிங்க தல என்று ரசிகர்கள் கெஞ்சுகிறார்கள். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்பாரா அஜீத்? பொறுத்திருந்து பார்ப்போம்.
