
விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இப்போது மீண்டும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாகி இருக்கிறார். இதுபற்றி கீர்த்தி சுரேஷ் பேசும் போது,
“மீண்டும் விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை என்னுடன் நடிக்கும் நடிகராக எப்போதும் பார்க்க முடியாது. அவருடன் நடிக்கும் போது எனக்கு பிடித்த நடிகருடன் இருக்கும் ரசிகையாகவே என்னை நினைத்துக் கொள்கிறேன்.
நான் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘மகாநதி’யில் நடித்திருக்கிறேன். நாக் அஸ்வின் இதை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தொடங்கியபோது மேக்கப்போட மட்டும் மூன்றரை மணி நேரம் ஆனது. பின்னர் அது பழகிப்போனது. சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவ்வளவு பெரிய நடிகை பாத்திரத்தில் நடிக்க பயமாக இருந்தது. இப்போது இந்த படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. சாவித்ரி மகளிடம் பேசி அவருடைய தாயார் பற்றிய விவரங்களை அறிந்தேன்.
சாவித்ரிக்கு நீச்சல் பிடிக்கும், டீ குடிப்பது, கார் ஓட்டுவது, கிரிக்கெட் ஆடுவது பிடிக்கும் என்று அவரது மகள் கூறினார். இவை அனைத்தும் எனக்கும் பிடிக்கும். அவருக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது” என்றார்.