‘அடங்காதே’, ‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘குப்பத்து ராஜா’, ‘100% காதல்’, ‘நாச்சியார்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜீவ்மேனன் இயக்கத்தில் ‘சர்வம் தாளமயம்’ படத்தில் நடிக்கத் தொடங்கினார் ஜி.வி.பிரகாஷ்.
‘மின்சார கனவு’ மற்றும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் 3-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.
தற்போது ராஜஸ்தான் சுற்றியுள்ள பகுதிகளில் பாடல் ஒன்றை படமாக்கவுள்ளார்கள். அதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவு பெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
9 பாடல்கள் கொண்ட இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நாயகியாக அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷுடன் நடித்துள்ளனர். இப்படத்தைத் தொடர்ந்து சசி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.