
டார்லிங்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சாம் ஆண்டன். அடுத்ததாகவும் ஜீ.வி.பிரகாஷை வைத்து ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தை இயக்கினார். தற்போது அதர்வா, ஹன்சிகா நடிப்பில் ‘100’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்துக்குப் பிறகு, ‘கூர்கா’ என்ற படத்தை இயக்குகிறார் சாம் ஆண்டன். இதில்தான் யோகிபாபு ஹீரோவாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது, செய்திகளும் வெளியாகின. ஆனால், ‘தான் ஹீரோ கிடையாது. ஒரு வெளிநாட்டுக்காரரும் நாயும் பிரதான பாத்திரத்தில் நடிக்கின்றனர். நான் படம் முழுக்கக் காமெடியனாக கூர்கா வேடத்தில் நடிக்கிறேன்’ என்று கூறினார் யோகிபாபு.
இந்நிலையில், இன்று ‘கூர்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில், நாயுடன் யோகிபாபு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. யோகிபாபு, கூர்கா கெட்டப்பில் காக்கி உடை தரித்திருக்கிறார். தான் ஹீரோ இல்லை என்று யோகிபாபு கூறினாலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர் புகைப்படத்தைத்தான் வெளியிட்டுள்ளனர். அத்துடன், படத்தின் தலைப்பு கூட அவர் கேரக்டரைக் கொண்டுதான் வைக்கப்பட்டுள்ளது. எனவே, பிரதான பாத்திரத்தில் அவர்தான் நடித்திருப்பார்.
4 மங்கி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸாக இருக்கிறது.